முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
கலிநிலைத்துறை
கற்றுவேத முற்றுமாயை கழலுமீச னேபதி
சொற்றசைவர் கட்கெனச்சொல் சொல்லுமாவி யேபரம்
முற்றும்வைதி கர்க்கெனச்சொன் மொழியுமாறு மாறுநாம்
உற்றமைலை ஞானதேவ னொருசொ லுண்மை சொல்லவே.
(59)
தாழிசை
சொல்லருங்கயி லைத்தணந்தனை துன்னுநீவிட குணமுமூர்
       சுடல்செய்சாபமு மின்றியேசம னோக்கமெய்தினை தோலுடை
பல்லெலும்பணி கோலமோவினை பாதியாணெனன் மாறினை
       பணிகள்யாவுமு றாதகன்றனை பாணிசென்னிசு மக்கிலை
வில்லிருந்தத ழும்பொழிந்தனை மீளநஞ்சமி ரிந்தனை
       விரைந்து சோறிடு மனையைநல்கென வேண்டுமாறு மறந்தனை
கொல்லிரும்பர சினைவிடுத்தனை குறைவிலாமதி மேவினை
       கோதறுஞ்சிவ ஞானியேயருள் கூருஞானவி நோதனே.
(60)
கட்டளைக்கலித்துறை
வினையே னெனினுங் கொடியே னெனினும் விதிவிலக்கு
நினையே னெனினு மியானே யறங்களி னின்றுடையேன்
அனையே யனைய சிவஞான தேவ னருண்மிகுதி
எனையே யடைதலி னாலைய மேது மிதற்கிலையே.
(61)
நேரிசைவெண்பா
இல்லாமை யில்லாமை யெய்தலா நூன்முழுதுங்
கல்லாமை கல்லாமை கற்கலாம் - வல்லான்
சிவஞான தேவன் றிருவடியைப் போற்றத்
தவஞான முண்டாயிற் றான்.
(62)
வஞ்சித்துறை
தானி யேசிவ
ஞானி யேயெனான்
மேனி யோடபி
மானி யாகுமே.
(63)

59. மாயை கழலும்-மாயை நீங்கும். 60. சமன் நோக்கம்-சமமான பார்வை.ஓவினை-விட்டொழித்தாய். பணிகள்-பரம்பணிகள். பாணி-கங்கை. பரசு-மழு. குறைவிலா மதி-பேரறிவு. கோது அறும்-குற்றம் இல்லாத. 61. வினையேன்-தீவினையேன். விதி விலக்கு-விதிக்கப்பட்டதும் விலக்கப்பட்டதும். அனை-தாய். 62. இல்லாமை இல்லாமை-வறுமையில்லாமை. 63. மேனி-உடல். அபிமானி-பற்றுடையவன்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்