முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
வார ணாசி சிதம்பர மங்கல மாதை வீழிபுகார்
சீர ணாமலை யம்பர் வலஞ்சுழி சேது மாதவனூர்
ஆர ணாடவி நின்பத பங்கய மாகும் வேறறியேம்
நார ணாதி வணங்கு மருள்சிவ ஞான தேசிகனே.
(74)
தாழிசை
தேசுலாவுமணி நாகமீரமதி தேய்வகன்றுவளர் மோவெனா
ஆசையோடமரும் வேணிநாதனரு ளாளனெந்தைபுகழ் காழிவாழ்
பாசநாசனெனு ஞானமாமதலை பாடவென்புமக ளாகுநான்
மாசிலாதசிவ ஞானிசீர்பரவ மாதரென்புவடி வாவரே.
(75)
மதங்கு, மேற்படி வேறு
ஆகு மேயிவள் வலிபிறர்க் காவிபோமுடல் போலவே
மோக மாதரின் மாறிய முதல்வனஞ்சிவ ஞானிசீர்
பாகு போன்மொழி யான்மிகப் பாடியாடிம தங்கிதான்
சோக மேதுமின் முனிவர்தந் துறவு கொள்ளைகொள் கிற்பளே.
(76)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
பகலாவெழுத் தைந்தேவடி வாகுஞ்சிவ ஞானி
       பாற்போகுவ னென்றேநினை வுற்றேனது பொழுதே
புகலாசையி ரும்பேயினிப் போவேனெனப் போய்த்தாற்
       புணர்மூலம லப்பேயவற் கண்டேகுவ னென்றே
அகலாமைய கன்றேயக லாநின்றது மெல்ல
       வாகத்தின்வி னைப்பேயவற் கண்டுஞ்சில நாணான்
இகலாமையி ருந்தேகுவ னென நின்றது மாயை
       யெனும்பேயத னோடேகுவ னெனநைந்ததி ரந்தே.
(77)

74. வாரணாசி-காசி. மாதை-திருவாமாத்தூர். வீழி-திருவீழிமிழலை. புகார்-காவிரிப்பூம்பட்டினம். அம்பர்-திருவம்பர். ஆரணாடவி-மறைக்காடு. 75. மதிதேய்வு அகன்று-திங்கள் தேய்தல் நீங்கி. காழி-சீகாழி. ஞானமாமதலை-திருஞானசம்பந்தர். மாதர் என்பு வடிவாவர் ; என்பது மாதர்களை என்பு போல் வெறுத் தொதுக்கத்தக்க மெய்யறிவு உண்டாகு மென்றபடி. 76. மாறிய-மாறுபட்ட. பாகு-இனிமை பொருந்திய வெல்லப்பாகு. 77. பகலா-பகுத்தலில்லாத. ஆசைஇரும்பேய்-ஆசையாகிய பெரிய பேய். மூலமலப் பேய்-அஞ்ஞானம். ஆகம்-உடல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்