முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
கட்டளைக்கலித்துறை
எனக்குப் பிறப்பில்லை யென்றே கனன்மழு வேந்துவன்யான்
நினக்குக் கருணையென் மேற்றா தலினின் னிலைமைகண்டே
எனக்குப் பிறப்புண்டென் பார்சிவ ஞானி யிருநிலத்தில்
நினக்குப் பிறப்புண்டென் பாரல ரோவவர் நிந்தைசெய்தே.
(82)
சம்பிரதம். எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
நிந்தையறும் படிமுழுது மளப்பம் வாங்கி
       நெடுவரையொன் றெடுப்பமெழு கடலை யள்ளிச்
சிந்துவமல் லியினலரி யாக்க வல்லோஞ்
       செய்குவமென் றயன்போனாற் றிசையும் பாரேந்
தந்தையினு மினியசிவ ஞான தேவன்
       றன்கருணை கொண்டெளிதிற் றருக்கர் கூறும்
ஐந்தணுவி லோரணுவு ளண்ட முண்ட
       வம்புகொளுஞ் சம்புவைநா மடக்கு வோமே.
(83)
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
அடங்க வெலும்புந் தோலுமா யருவ ருத்திட் டுமிழ்கின்ற
உடம்பை நானென் றிருந்தேனை யொழிவில் கருணைச் சிவஞானி
கடந்த பிரம நீயெனவே கழற்கா லென்புன் றலைவைத்தான்
முடங்கு சுருள்வா னாய்க்கொருபொன் முடிசூட் டினனெம் பெருமானே.
(84)
தரவுகொச்சகக் கலிப்பா
பெருமானே சிவஞானிப் பெயருடையோய் நினதருளால்
வருமான்மா பரமுத்தி மருவுதலே யியல்பாகும்
பரமான்மா வுரைசெய்யப் படுகாசி முதலனதாந்
தருமாறோ ருபசாரந் தருவதுநிற் கிடைத்திடினே.
(85)
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
கிடைப்பரிய நீதுறந்த கங்கைதிருப் பாற்கடலாய்க் கிடந்த தாங்குச்
சடைப்பழகு மனந்தனத னொடுபோகச் சயனமெனச் சார்ந்தான் மாயன்
படப்பணியை நீங்குதலால் வளர்ந்துபோ யிற்றுமதி பாணி மானை
விடுப்பவத னுடல்புகுந்த தரியசிவ ஞானியென விளங்கு வோயே.
(86)

82. என்மேற்று-என்மேலது. 83. படி-உலகம் அளப்பம்-அளவு செய்வோம். அலரி-கதிரவன். அயன்-நான்முகன். தருக்கர்-தருக்கநூலார். அண்டம் உண்ட அம்பு-திருமால். சம்பு-சிவபிரான். 84. கடந்த பிரமம்-எல்லாவற்றையும் கடந்து நிற்கும் பிரமம். கழற்கால்-வீரக்கழல் அணிந்த திருவடி. முடங்கு சுருள்வால்-வளைந்து சுருண்ட வால். 85. பரமுத்தி-மேலான வீடுபேறு. உபசாரம்-வழிபாடு. 86. அனந்தன்-ஆதிசேடன். சயனம்-படுக்கை. படப்பணி-படத்தையுடைய பாம்பு. பாணிமானை-கையிலுள்ள மானை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்