முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
கட்டளைக் கலித்துறை
விளங்காத வண்ணம் பிறர்தீங் கடக்கி விரித்துநன்மை
உளங்காதல் செய்துரைப் பார்கூ றுதற்கிங் கொருகடுகின்
இளங்கா ழளவு நலமில னாகிய வென்னையென்னோ
துளங்கா தருளச் சிவஞான தேவன் றொடங்கினனே.
(87)
எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
தொடங்கியா யிரநாவால் யோக மெல்லாஞ்
       சொல்லினுநீ போகியெனப் படுவாய் மண்ணை
விடும்பரிசு நினக்கில்லை பணம்போ மாயின்
       வீந்திடுவை விரைகமழ்மென் மலர்க்கட் பெம்மான்
முடங்குறினு நினைவிடுமோ வளியுள் வாங்கு
       முயற்சியால் யோகியெனப் படாய னந்தா
அடைந்தசிவ ஞானியெனும் பரம யோகி
       யல்லைகாண் சொற்சொலவே வல்லை நீயே.
(88)
நேரிசை வெண்பா
நீயிருப்பப் புன்பொருட்கு நீசர்ப் புகழ்வாருந்
தூய்திருப்ப வூன்விரும்பித் துய்ப்பாரும் - நாயிருத்தல்
போலிருந்து நீணரகிற் போய்விழுவா ரேமயிலை
மேலிருந்து வாழ்முனியா மேல்.
(89)
கட்டளைக் கலித்துறை
மேலுக்கு நீவரம் பாயினை கூறில் வியனுலகில்
கீழுக்கு நான்வரம் பாயினன் மேலெனக் கீழினுக்கும்
மேலுக்கு நாப்பணின் றார்கீ ழெனச்சொல மேவுவர்காண்
கீழுக்கு நாடரி தாஞ்சீர் மயிலைக் கிரிமுனியே.
(90)

87. விளங்காத வண்ணம்-மேற்படாதவாறு. துளங்காது-நடுங்காமல். 88. போகி-போகத்தையுடையவன்; பாம்பு. மண்ணைவிடும் பரிசு-உலகத்தை விட்டு நீங்குந் தன்மை. பணம்-படம். வீந்திடுவாய்-இறந்து போவாய். முடங்குறினும்-முடங்கிக் கிடந்தாலும். வளி-காற்று. 89. புன்பொருள்-இழிந்த பொருள். நீசர்-நல்லியல்பில்லாதவர்கள். தூய்து-தூய்மையானவைகள். 90. மேலுக்கு-மேன்மைக்கு. கீழுக்கு-கீழாந்தன்மைக்கு. நாப்பண்-நடு.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்