முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
24. திருவெங்கை மான்மியம்
தானத்திலே திருவுருக்கொண்டு வீற்றிருக்கின்றோம்; ஆலயமமமைத்து வழிபடுவீராக; அமைக்குங்கால், வட தேசத்திலிருந்து பஞ்சத்தினால்மெலிந்து சில சிற்பர்கள் வருவார்கள் ; அவர்களாலே திருப்பணி பூர்த்தியாகும்” என்று திருவாய்மலர்ந்து மறைந்தருளினார்.
அத்திருவாக்கைச் சிரமேற்கொண்டு திருவெங்கை நகரத்தையடைந்து, குறித்த ஸ்தானத்திலே பரிசோதிக்க, அங்கே பூமிக்குள் ஒரு சிவலிங்கமும், அம்பிகை முதலிய சிவ மூர்த்தங்களும் இருக்கக்கண்டு அளவிடப்படாத ஆனந்தசாகரத்தின் மூழ்கி, திருவருளைப் பரவி, அப்பொழுதே சுவாமிக்குப் பழமலை நாதரெனவும், தேவிக்குப் பெரியநாயகியம்மை யெனவும் திருநாமந்தரித்து, சிறிய ஆலயம் அமைத்து, நித்திய பூசை ஏற்படுத்தினார். அந்நாளிலே, சிவவாக்கின்படியே வடதேசத்திலிருந்து சில சிற்பர்கள் வர, அவர்களுடைய நூலுணர்ச்சி முதலிய உத்தம குணங்களனைத்தையும் நோக்கி, அதிசயித்து, வேண்டும் பொருள்களை வெறுக்கக்கொடுத்து, அவர்களை அத்தலத்திற்றானே குடியேற்றி, திருப்பணிகளை இயற்றுவித்து வருங்கால், இலிங்காரெட்டியார் சிவலிங்க ஐக்கியமாய் விட்டமையால் அண்ணாமலைரெட்டியாரே தலைவராகவிருந்து, அவரினும் மிகச்சிறப்பாக நடத்துவித்து வந்தார்.
ஒரு தினத்திலே, அச்சிற்பர்களுக்குத் தலைவனானவன் கருப்பக்கிருகத்தின் கீழே கட்டப்பட்டிருக்கும் சாரத்தின் மேலிருந்து கொண்டு, வேலைக்காரணை வெற்றிலைமடித்துக் கொடுத்தற்பொருட்டு அழைக்க, அவன் அத்தருணம் அங்கில்லாமையால் அண்ணாமலைரெட்டியார் அவ்வேலை முட்டுப்படா வண்ணம் தாம் கீழிருந்து மடித்துக்கொடுத்தனர். அச்சிற்பன் சாரத்தினது மறைப்பால் இன்னாரெனத் தெரியாது, இடது கரத்தால் வாங்கி உட்கொண்டபின் உண்மைதெரிந்து, ஓகோ! என்செய்தோமெனப் பெரிதும் இடரின்மூழ்கி, அபசாரஞ்செய்த அந்தக்கரத்தைத் துணிக்க எத்தனித்தலும், ரெட்டியார் அவனை நோக்கி, “கரத்தைத் துணிப்பது தகுதியன்று ; அக்கரத்தைக் கொண்டு உனக்குத் தெரிந்துள்ள அரிய வேலைகளெல்லாம் அமைய இத்திருப்பணியைப் பூர்த்திசெய்யின் என்றும் நின்பெயர் நிலைபெறுவதன்றியும் நினக்கு எய்துதற்கரிய சிவகதி பெறுதற்கும் இதுவே ஏதுவாகும்” என்று வற்புறுத்தினார். சிற்பனும் இவ்வுத்தமோத்தம உறுதிவாக்கியத்தைக் கேட்டு, பெருமகிழ் சிறந்து, முன்கட்டிய கருப்பக்கிருகத்தை முற்றும் பிரித்து விட்டு, இத்திருப்பணிபோல யாண்டுமில்லையென
(2)

2. தமிழ் குடியிருந்த தடவரை-பொதிய மலை. 192. இமிழ்திரை-ஒலிக்கின்ற அலை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்