| 1. சோணசைலமாலை |
|
| |
எழுபசும் புல்லும் புனலுமெவ் விடத்து மிருந்திட நினைத்தவவ் விடத்தே விழைவொடு வந்து தோன்றுநீ யிருப்ப வீணின்மா னுடர்பிறந் துழல்வார் மொழிதரு கருணை மலையெனும் பெயரன் மொழியொரீஇ வேற்றுமைத் தொகையைத் தழுவுறநின்று வளர்ந்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(91) |
| |
| |
வேணவா வகன்று நின்றிரு வடியின் மெய்ம்மையன் படைந்துபொய்ப் பிறவி நாணுவா ரினங்கண் டுறும்படி தூய ஞானநாட் டம்பெற வருளாய் சேணுலா மதியந் தவழ்பெருங் குடுமிச் சிலம்புகள் சிறுதுரும் பாகத் தாணுவா யெழுந்து வளர்ந்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(92) |
| |
| |
நின்னையே நோக்கி விடாதகட் புலனு நின்னையே நினைக்குநெஞ் சகமும் நின்னையே துதிக்கு நாவுமென் றருளி நின்றிரு வடியின்வைத் தருள்வாய் தன்னையே றினர்க்குச் சகமெலாங் காட்டுந் தரணியோ டிகலிமே வினர்க்குத் தன்னையே காட்டு மலையெனுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(93) |
| |
|
| |
91. கருணைமலை யென்னும் பெயர் இம்மலை வடிவமையுமுன் கருணையாகிய மலையையுடையவர்; அல்லதுமலைபோலுங் கருணையையுடையவரென அன்மொழித் தொகையதாய் நிலவி, இம்மலை வடிவமைந்தபின் கருணையையுடைய மலையென வேற்றுமைத் தொகையதாயிற்றென்றபடி. 92. வேணவா-வேட்கைப் பெருக்கம். பொய்ப் பிறவி என்பது நிலைபெறுதலில்லாத இப்பிறவியை. 93. கட்புலன்-கண்ணிந்திரியம். தரணி-மலை. தன்னையேகாட்டல். பதிநிலையையறிவித்தல். தரணியோடு இகலி-உலகத்தில் உள்ளமலைகளோடு மாறுபட்டு.
|
|
|
|