முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
மின்வணங் கவருஞ் செஞ்சடா டவியும்
      விளங்கொளி மார்பும்வா னுலக
மன்வணங் குறுநின் பதாம்புய மலரு
      மனங்குடி யிருக்குநா ளுளதோ
பொன்வணம் புரியும் காகமொன் றினைப்பொற்
      பொருப்பென வடைபொரு ளனைத்துந்
தன்வணம் புரியும் பொருப்பெனுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(94)
குருமணி மகுடம் புனைந்துல காளுங்
      கொற்றவ ராதலி னென்கட்
கருமணி யெனுநின் றொண்டர்குற் றேவல்
      கருதியாட் பட்டிட லினிதே
பெருமணி விசும்பி னுச்சியி னெழுந்த
      பிள்ளையங் கதிரென வரவந்
தருமணி யொளிவெண் மதியுறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(95)
சிம்புளாய் மடங்க லெறுழ்வலி கவர்ந்த
      திறலுமுப் புரஞ்சுடு விறலும்
அம்புயா தனத்தன் முடிகளைந் திட்ட
      வடலுமேத் தினர்க்கிட ருளதோ
உம்பர்மா மதியி லங்கையி லிருந்த
      வுழைகுதித் திருப்பவா ரழல்வான்
தம்பமா யெழுந்து நின்றிடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(96)

94. பொன்னிறத்தவும் கருநிறத்தவுமாகிய பறவைகள் தன்பாலெய்தின், மேரு, தன்னிறமுடையவைகளை வேற்றுமைப்படுத்தும் ஆற்றலின்றிக் கருநிறமுடையவைகளையே தன்னிறத்தனவாக்கும்; சிவ சொரூபமாகிய இம்மலை தன்மயத்தபொருள் ஒன்றுமின்னமையின் அடைந்த உயிர்ப் பொருள்களனைத்தையும் தன்மயம் ஆக்கா நிற்குமென்பது. மின்வணம்-மின்னலின் அழகு. 95. பிள்ளையங்கதிர்-இளஞ்சூரியன், ஆண்டவன் அடியவர்கட்குப் பணிசெய்வதே அழியாப் பேரின்பத்தைக் கொடுக்கும் என்று பொருள்பட “அன்பர் பணிசெய்ய வெனையாளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலைதானே வந்தெய்தும் பராபரமே” என்று தாயுமானார் கூறுவதுங் காண்க. அரனடியவர்கட்குச் சிறுபணி செய்ய வேண்டும் என்பது இப்பாட்டாற் கூறப்படுகின்றது. குற்றேவல்-சிறு வேலை. குரு என்பது இங்கு நிறம். 96. சிவபெருமான் கொண்ட (உரு) மூர்த்தங்களுள் கோர மூர்த்தங்களை இடரொழிவிற்கும், மிச்சிரமூர்த்தங்களைச் சித்தியெய்தற்கும், சாந்தமூர்த்தங்களைச் சாந்தி யெய்தற்கும் வழிபட வேண்டுமென்பது நூற்றுணிபாகலின்; ஈண்டியம்பிய உக்கிர மூர்த்தங்களின் வெற்றிகளைத் துதிக்கில் இடரெய்தா வென்பது. சிம்புள்-சரபம். மடங்கல்-நரசிங்கம். எறுழ்வலி-மிகுந்தவலி. அம்புயாதனத்தன்-நான்முகன்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்