| 1. சோணசைலமாலை |
|
| |
அஞ்சலென் றவலக் கொடியனேன் றனைநின் னடியரிற் கூட்டுக வுலகின் நஞ்சமுண் டிருண்ட கண்டமென் றுனது நற்கள மிகழ்பவ ருளரோ வஞ்சமைங் கரன்கொண் டிளவலோ டிகலி வலங்கொள்வா தின்னும்வந் துறினுந் தஞ்சமென் றிடாது நின்றிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(97) |
| |
| |
அணிந்திடு கலனுஞ் சாந்துமொண் டுகிலு மரிவையர் போகமும் பெறுவான் துணிந்திடு மனமென் றுனைப்பொரு ளாகத் துணியுமோ வறிந்திலேன் றமியேன் பணிந்திடு மயன்மால் பெருமைக ளனைத்தும் பறவைகொண் டெழுதலாய் முடிந்து தணிந்திட நிமிர்ந்து நின்றிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(98) |
| |
| |
பூவுறு தடமு மதியுறு விசும்பும் பூணுறு முறுப்புநின் றுலகாள் கோவுறு நகரு மென்னவென் மனநின் குரைகழன் மருவுநா ளுளதோ ஓவுறு மனைசெய் பவர்கொள மரந்தாங் கோங்கல்க ணாணவுன் னினர்க்குத் தாவுறு முயர்வீ டளித்தருள் சோண சைலனே கைலைநா யகனே.
|
(99) |
| |
|
| |
97. உலகை வலம்வந்து முன்னரெய்தினார்க்கே அளிப்பமென்ற கனியைப்பெற முருகக்கடவுள்வலஞ் செல்லுங்கால் விநாயகர் சிவபெருமானை வலம் வரின் உலகை வலம் வந்ததாமென மதித்து வலம் வந்து அக்கனி பெற்றவராகலின் வஞ்சங் கொண்டென்றும், மலையுருவாகிய இப்பெருமானை இவர் வலம் வருமுன் அவர் மயிலில் உலகை வலம் வந்து விடுவராகலின் தஞ்சமென்றிடாது நின்றிடுமென்றுங் கூறினார். வஞ்சம்-கபடம். தஞ்சம்-ஈண்டு எளிமை. இளவல்-தம்பியாகிய முருகக் கடவுள். இகலி-மாறுபட்டு. 98. பெருமைகளனைத்தும் தணிந்திட என இயையும். கலன் என்பது இங்கு ஆபரணம். இப்பாட்டால் சிற்றின்பத்தைத் தரும் இப்பொய்ப் பொருளையே பொருளாகக் கொள்ளாமல், பேரின்பத்தைத்தரும் மெய்ப்பொருளாகிய உன்னை என் மனங்கொள்ள வேண்டும் என்னுங் கருத்தொடு கூறுவது காண்க. 99. ஓவுறுமனை-அழியும் வீடு.தாவுறும் வீடு-அழியாத முத்திவீடு. தா-வன்மை; எனவே அழியாமை விளக்கிற்று. தாவுஎனப் பிரித்துப் பற்றுக்கோடென்றலுமாம். ஓங்கல்கள்-மலைகள்.
|
|
|
|