முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
2. நால்வர் நான்மணி மாலை
நேரிசை வெண்பா
இலைபடர்ந்த பொய்கை யிடத்தழுதல் கண்டு
முலைசுரந்த வன்னையோ முன்னின் - நிலைவிளம்பக்
கொங்கை சுரந்தவருட் கோமகளோ சம்பந்தா
இங்குயர்ந்தா ளார்சொல் லெனக்கு.
(5)
கட்டளைக் கலித்துறை
எனக்கன்பு நின்பொருட் டெய்தாத தென்கொல்வெள் ளேறுடையான்
தனக்கன்பு செய்திருத் தாண்டக வேந்தவித் தாரணியில்
நினக்கன்பு செய்கின்ற வப்பூதி யைச்சிவ நேசமுறும்
இனர்க்கன்பு செய்நம்பி யாரூர னேத்து மியல்பறிந்தே.
(6)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
அறிந்து செல்வ முடையானா மளகைப்
     பதியாற் றோழமைகொண்
டுறழ்ந்த கல்வி யுடையானு மொருவன்
     வேண்டு மெனவிருந்து
துறந்த முனிவர் தொழும்பரவை துணைவா
     நினைத்தோ ழமைகொண்டான்
சிறந்த வறிவு வடிவமாய்த் திகழு
     நுதற்கட் பெருமானே.
(7)

5. நிலை விளம்பவென்பது சோணாட்டந்தண ரொருவரெய்தி உரைத்தமையைச் சுட்டி நின்றது. இதனைத் திருவிளையாடற் புராணத்தானும், “கேட்குங்கால் மங்கையர்க்கரசி யார்க்குக் கொங்கை சுரந்தமையைச் சுரந்த திருமுலைக்கே” என்னும் திருக்களிற்றுப் படியார்த் திருப்பாடலானும் தெளிக. 6. திருத்தாண்டக வேந்த என்று விளித்தது திருநாவுக்கரசரை. முதன்முதல் இவரே தாண்டகம் பாடிய தலைவரானபடியால் அப்பெயர் பெற்றார் என்க. வேந்த: ஆரூரன் அப்பூதியை ஏத்துமியல்பறிந்தும் நின் பொருட்டு எனக்கு அன்பெய்தாதது என்எனக் கூட்டுக. ஏத்துமியல்பு-“ஒருநம்பியப்பூதி யடியார்க்கு மடியேன்” எனத் துதித்த மேம்பாடு. இனர்க்கு-திருக்கூட்டத்தார்க்கு. 7. இருந்து என்பது இயற்கையறிவு சொரூபராகலின் தமக்கிணையொத்தாரை நேடியிருந்தென்பதும், நினையென்பது நெற்றிக்கண் படைத்தவரே தோழமை கொள்வாராயின் நின்பெருமை புகலவெளிதோ வென்பதும் தோன்ற நின்றன. அளகைப்பதியான் -குபேரன். உறழ்ந்த-ஒப்பான.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்