முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
2. நால்வர் நான்மணி மாலை
கட்டளைக் கலித்துறை
தாயிலி யாகுஞ் சிவபெரு மான்றனைத் தானெனுமோர்
கோயிலி னாரறி வாகிய நாமமுன் கொண்டிருந்த
வாயிலி னாணவ மாகுங் கபாடமு மன்றிறந்து
நோயிலி யாகிய சொல்லிறை காட்டுவ னோக்குதற்கே.
(14)
எழுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
நோக்குறு நுதலோ னின்னிடை விருப்பா
     னூற்பக வன்ன நுண் மருங்குல்
வார்க்குவி முலைமென் மகளிர் தம் புலவி
     மாற்றுவான் சென்றன னென்றால்
கோக்கலிக் காமன் வயிற்றிடைக் குத்திக்
     கொண்டதே துக்குநீ புகலாய்
காக்கரு மதலை விழுங்கிய முதலை
     கான்றிடத் தோன்றுநா வலனே.
(15)
நேரிசை யாசிரியப்பா
வலமழு வுயரிய நலமலி கங்கை
நதிதலை சேர்ந்த நற்கரு ணைக்கடல்
முகந்துல குவப்ப வுகந்தமா ணிக்க
வாசக னெனுமொரு மாமழை பொழிந்த
திருவா சகமெனும் பெருநீ ரொழுகி
ஓதுவார் மனமெனு மொண்குளம் புகுந்து
நாவெனு மதகி னடந்து கேட்போர்
செவியெனு மடையிற் செவ்விதிற் செல்லா
உளமெனு நிலம்புக வூன்றிய வன்பாம்
வித்திற் சிவமெனு மென்முளை தோன்றி
வளர்ந்து கருணை மலர்ந்து
விளங்குறு முத்தி மெய்ப்யன் றருமே.
(16)

14. உயிர்முற்றும் சூக்கும வாலயமும் அவற்றினுடலனைத்தும் தூலவாலயமுமாகக் கூறுவது நூற்றுணிபு. முன்-அநாதியே. உம்மை உயர்வு சிறப்பு; எச்சமுமாம். மன்திறத்தல்-பின்வாதியாதொழித்தல். வழிபாடுடையார்க்குப் புரியுமாறு வகுத்தது. கபாடம்-கதவு. நோயிலியாகிய-பிறவிப் பிணியில்லாதவராகிய. 15. நுதல் நோக்கு உறுவோன் எனக் கண்ணழித்து, கருத்தின் குறிப்பைக் கண்டறிந்த கடவுள் என்க. நுதலல்-கருதல். கண்படைத்த நெற்றியோன் எனலும் ஒன்று. பகவு-பிளப்பு. சிவாபராதரைத் தண்டிக்க; அஃதியலாதேல் தம்முயிர் துறக்க; என்பது குறித்தோவென்பார் ஏதுக்கென்றார். காக்கவென்பதன் அகரந் தொக்கது. மதலையைக் கான்றிட எனக்கொள்க. நோக்கு-கண். 16. வலம் என்பது வல்லமை நலம்-தூய்மை. உலகு-மக்கள்; மழை-மேகம்; குளம்-ஏரி. புகத்தருமென இயையும். ஊன்றிய அன்பு-முன்னரே பதிந்துள்ள அன்பு.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்