முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
2. நால்வர் நான்மணி மாலை
நேரிசை வெண்பா
பயனாகு நல்லாண் பனைக்குவிடத் திற்கு
மயிலாகு நோய்க்கு மருந்தாம்-உயிராகுஞ்
சிந்துமெலும் பிற்குச் சிரபுரத்து நாவலன்சம்
பந்த னியம்புதிருப் பாட்டு.
(17)
கட்டளைக் கலித்துறை
பாட்டான் மறைபுக ழும்பிறை சூடியைப் பாடிமகிழ்
ஊட்டா மகிழ்சொல் லிறைவனைப் பாடி யுவப்புறுக்க
வேட்டான் மலிபெருங் கல்லவன் போல மிதப்பனெனப்
பூட்டா மறிதிரை வார்கடற் கேவிழப் போதுவனே.
(18)
எழுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
போத முண்ட பிள்ளை யென்பு
     பொருகண் மாது செய்ததோ
காதல் கொண்டு சொல்லின் மன்னர்
     கன்மி தப்ப வுய்த்ததோ
வாய்தி றந்து முதலை கக்க
     மகனை நீய ழைத்ததோ
யாது நம்பி யரிது நன்றெ
     னக்கி யம்ப வேண்டுமே.
(19)
நேரிசை யாசிரியப்பா
வேண்டுநின் னடியார் மெய்யன் பெனக்கும்
அருள்செய் சிவனே யலந்தே னந்தோ
முறையோ முறையோ விறையோ னேயென்
றழுது செம்பொ னம்பலக் கூத்தன்
அருளாற் பெற்ற வன்பினி லொருசிறி
தடிய னேற்கு மருளல் வேண்டு
நீயே கோட னின்னருட் பெருக்கிற்
கேற்ற தன்றிள வேறுகந் தேறியைப்
பரிமா மிசைவரப் பண்ணிய வித்தக
திருந்திய வேதச் சிரப்பொருண் முழுதும்
பெருந்துறை யிடத்துப் பெருஞ்சீர்க்
குருந்துறு நீழலிற் கொள்ளைகொள் வோயே.
(20)

17. பயன்-பழம். ஆண்பனையினன்மையாவது-பிள்ளையாரால் முத்திபெறற்குரிய முதுதவமுடைமை. பாட்டின் விளைவைப் பாட்டு விளைவாக வுபசரித்தார். சிவபுரம்-சீகாழி. 18. ஊட்டா பூட்டாவென்பன வினையெச்சம். தேகாதிப் பிரபஞ்சத்தைச் சிறிதுங் குறிக்கொள்ளா னென்பார் வேட்டவன் கடற்கே போதுவன் என்றலுமாம். இங்ஙன மியற்றியேனும் இவரருள் பெறவேண்டுமென்பது. சொல்லிறைவன்-நாவுக்கரசர். வேட்டான்-விரும்பியவன். 19. கன்னிகையாக்குதற்கு என்பும் மிதத்தற்குக் கல்லும்போலஆதாரமின்றாகவும் பாடலொன்றால் அஃதுள தாக்கியழைத்தமையின் அதனருமைதோன்ற அரிதென்றார். இதனைக் கந்தபுராணம் கடவுள் வாழ்த்து 22ஆவது செய்யுளாலுமுணர்க. ஓகாரமூன்றும் வினாப்பொருளவேனும் இறுதியது பிரிநிலையுமாம். போதம்-ஞானப்பால். பொருகண்-போர்செய்கின்ற கண். 20. அடியார் மெய்யன்பு-அடியார் பாற்கொள்ளும் உண்மையன்பு. வித்தக, கொள்வோய், அருளல் வேண்டும் எனவியையும். அலந்தேன்-கவலைகொண்டேன். கோடல்-கொள்ளுதல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்