முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
2. நால்வர் நான்மணி மாலை
கட்டளைக் கலித்துறை
ஊர்ந்து வருமிள வேறுடை யான்ற னுளத்தருளாற்
சார்ந்து சமண்வீட் டுறுமுனக் கேவருஞ் சைவநலங்
கூர்ந்து மிளிர்தரு நாவர சேநல் குரவுமுனஞ்
சேர்ந்து மருவினர்க் கேசிறந் தோங்குறுஞ் செல்வமுமே.
(34)
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
செல்வநல் லொற்றி யூரன் செய்யசங் கிலியா லார்த்து
மல்லலம் பரவை தன்கண் மாழ்குற வமிழ்த்து மேனும்
அல்லுநன் பகலு நீங்கா தவன்மகி ழடியி லெய்தி
நல்லவின் படைந்தி ருப்ப னம்பியா ரூரன் றானே.
(35)
நேரிசை யாசிரியப்பா
தானே முத்தி தருகுவன் சிவனவன்
அடியன் வாத வூரனைக்
கடிவின் மனத்தாற் கட்டவல் லார்க்கே.
(36)

34. உனக்கே மிளிர்தருமென இயையும். இழந்து பெற்றார்க்கே நன்கு விளங்குமென்பது. வருஞ் சைவநலம்-சின்னாளகன்று பின்னர்ச் சேர்ந்த அச்சைவத்தின் சிறப்பு. கூர்ந்து மிளிர்தரும் என்பதனை நாவுக்கடையாக்கிச் சைவநலம் வரும் என்றலுமாம். ஊர்ந்து-செலுத்தி. வீட்டுறும்-விட்டுநீக்கும். 35. இருவரையும் தாமவாவிய வாசனையகலத் திரோபவித்து இங்ஙனஞ் சேர்த்தினாரேனும் அவ்வின்பத்தைச் சிற்றின்பமாக நுகர்ந்தனரென்பது. மகிழடி-மகிழ்ச்சியைப் பயக்குந் திருவடி, மகிழமரத்தடி என இரட்டுறமொழிக. இருத்தல்-கைலைக்கண் வதிதல். இதுநிந்தாஸ்து தியாகவும் நிற்பதோர்க. ஆர்த்து-பிணித்து. மல்லல்-வளப்பம்; அழகு. சங்கிலியாற் கட்டிக்கடலில் தள்ளினாலும் அதனால் துன்புறாது இன்பத்தையே யடைந்திருப்பன் என்றும் பொருள்தொனித்தலையுங் காண்க. 36. வல்லார்க்கே தருகுவனென இயையும். தற்போதமிழந்து இறைவர் பணியினின்றாராகலின் இவரை வழிபடுவார்க்கு அவ்விறைவரே முத்தியளிப்பரென்பது. கடிவு-நீக்கம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்