முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
2. நால்வர் நான்மணி மாலை
நேரிசை வெண்பா
வல்லார் பிறப்பறுப்பர் வண்மை நலங்கல்வி
நல்லா தரவின்ப ஞானங்கள்-எல்லாந்
திருஞான சம்பந்தன் சேவடியே யென்னும்
ஒருஞான சம்பந்த முற்று.
(37)
கட்டளைக் கலித்துறை
உற்றா னலன்றவந் தீயினின் றானல னூண்புனலா
அற்றா னலனுகர் வுந்திரு நாவுக் கரசெனுமோர்
சொற்றா னெழுதியுங் கூறியு மேயென்றுந் துன்பில்பதம்
பெற்றா னொருநம்பி யப்பூதி யென்னும் பெருந்தகையே.
(38)
எண்சீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
பெருமிழலைக் குறும்பரெனும் பரம யோகி
     பெரிதுவந்துன் றிருவடித்தா மரையைப் போற்றி
விரைமலர்தூய் வந்தனைசெய் கின்றா னென்றால்
     விளங்கிழையா ரிருவரொடு முயங்க லாமோ
உரைமதிநின் றனைவெறுப்ப தென்கொ னின்னை
     யுடையானுக் கடுத்தசெய லுனக்கு மாயிற்
சுரர்முனிவர் பரவலுறும் பெருஞ்சீர்த் தொண்டத்
     தொகைசெய்தோ யறமுதனால் வகைசெய் தோயே.
(39)

37. வல்லாரென்பது வல்லுநரையும் வல்லுநரல்லாரையும்; ஒரு ஞானமென்பது-ஒப்பிகந்த ஞானத்தையும் சுட்டி இரட்டுற மொழிதலாய் நின்றன. ஏகாரம் தேற்றத்தோடு பிரிநிலை. 38. தவம்-சரியையாதிகள். புனல் ஊணாக நுகர்வு அற்றானும் அலன் என உம்மை பிரித்துக் கூட்டுக: இப்பாட்டால், இறைவன் பெயரைக் கூறாவிடினும் அவன் அடியவர் பெயரைக் கூறினாலே அழியாப்பதம் பெறலாம் என்பதையறிக. அடியவர் பெயர் கூறுவது ஆண்டவன் பெயரைக் கூறியதுபோலாம். ஏனெனின் இறைவன் தொண்டருள்ளத் தொடுக்கமாதலால். உற்றானலன்-செய்தானல்லன். ஊண்-உணவு. 39. பரமயோகி வழிபடுகின்றாரென அறிஞர் விதப்பராயின் நீர் இரு தேவிமாரோடு முயங்குவது தகுதியோ? தகுதியன்றாயினும் அவர் கிரியாசத்தியும் ஞான சத்தியுமாய்த் திகழ இறைவர்போன்று ஆன்மாக்களுக்குப் போகமோட்சங்களை அளிக்குஞ் செயல் உமக்கும் அமைந்த அவ்வியல்புணர்ந்து வழிபடாது சிலர் போகியென உம்மைப் புகலா நிற்பதென்னை? இருவர்-பரவையுஞ் சங்கிலியும். முயங்கல்-கூடுதல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்