முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
3. திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி
தினகர னந்த நனியிலங் காநின்ற செய்யநற்செந்
தினகர னந்த நிதியா யினனடற் சீரயிலேந்
தினகர னந்த கனைச்செற்ற தாளர் திகழ்கனகா
தினகர னந்த நடனர் தனயனென் சிந்தையனே.
(2)
சிந்தனை யாகத் திசையந் தணர்க்கிறை சேரகங்க
சிந்தனை யாகத் தரையளித் தாடரை சென்றிரந்த
சிந்தனை யாகத் திடையியைந் தான்றந்த சேயளியாற்
சிந்தனை யாகத்த நற்செந்தி லாய்நினைச் சேர்ந்தனனே.
(3)
தனத்தலங் கார நிறைநா ரியரந் தரத்தசைகே
தனத்தலங் கார நிகழரங் காடச்செய் தன்னினயத்
தனத்தலங் கார தராயியங் கத்தக்க தண்செந்திற்கந்
தனத்தலங் காரனை யானய னேத்திடத் தங்கினனே.
(4)
தங்கந் தனங்க ளடையத் தனியெனைத் தள்ளியங்கே
தங்கந் தனங்க டரச்சென் றனரறிந் தாரிலைகா
தங்கந் தனங்க ளலர்காக்க ணாரெழிற் றண்செந்திலார்
தங்கந் தனங்க நிகர்செக்கர் செய்சஞ் சலத்தினையே.
(5)
சலந்தர னாகந் தரித்தார்தந் தாதன் றனதிடைச்சஞ்
சலந்தர னாகந் தரைநடந் தாலெனச் சார்ந்ததண்டன்
சலந்தர னாகந் தளரச்செற் றார்தன யன்றலநச்
சலந்தர னாகந் தனக்கிறை சேர்செந்திற் சார்ந்திடற்கே.
(6)

2. தினகரன் நந்த-கதிரவன் ஒளிகுன்றுமாறு. அடற்சீர் அயில் ஏந்தின கரன்-வலிமை பொருந்திய சிறப்பாகிய வேற்படையைத் தாங்கின கையை உடையவர். அந்தகன்-நமன். செற்ற-அழித்த. நகர் அனந்தன்-அசைகின்ற ஆதிசேடன். நடனர்-அம்பலவாணர். 3. சிந்தனை-எண்ணம். அகம் கசிந்து-மனம் நெகிழ்ந்து. அனை-அன்னை, தாய். தரைஅளித்தாள்-உலகத்தைப் பெற்றவள். இரந்த சிந்தன்-யாசித்த குறள்வடிவத் திருமால். அளியால் சிந்து அனையாய்-அருளால் கடலைப் போன்றவரே. கத்த-தலைவனே. 4. தனம்-கொங்கை. நாரியர்-பெண்கள். அந்தரம்-விண். கேதனம்-கொடி. அரங்கு ஆட-அவையில் நடிக்க. செய்-வயல். நத்து-சங்கு. அலம் கார் அதராய்-கலப்பைச்சாலில் நிற்கின்ற நீரின் வழியாக. கார் அனையான்-திருமால். அயன்-நான்முகன். 5. தங்கம்-பொன்போன்ற நிறத்தையுடைய தேமல். அம் தனங்கள்-அழகிய பொருள்கள். காதம்-காததொலை. கந்தம்-மணம். அங்கம் நிகர் செக்கர்-உடலைப் போன்ற செவ்வானம். சஞ்சலம்-துன்பம். 6. சலம் தரம் நாகம் தரித்தார்-கங்கையையும் தலைமாலையையும் பாம்பையும் அணிந்தவர். தாதன்-மார்க்கண்டன். சஞ்சலம்தர-துன்பத்தைக் கொடுக்க. நாகம்-யானை. தண்டன்-நமன். சலந்தரன் ஆகம்-சலந்தரன் என்பவனுடைய உடல். நச்சலம்-விரும்பினோமில்லை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்