முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
3. திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி
சாரங்கஞ் சங்கரி கட்சிச்சித் தேய்ந்தகைச் சங்கரனார்
சாரங்கஞ் சங்கரி தாஞ்சக் கரங்கையிற் றாங்கினன்சேய்
சாராங்கஞ் சங்கரி யாநண் ணினர்க்கந்தத் தந்திரத்தா
சாரங்கஞ் சங்கரி தேயெனச் செய்நின் சரண்டந்ததே.
(7)
தந்தனஞ் சங்கை யணிகரர் சேர்க்கத் தடங்கணலை
தந்தனஞ் சங்கை யலரென்செய் யாடங்கச் சற்சனர்நித்
தந்தனஞ் சங்கை யகலறத் தீசெந்திற் சார்கதனித்
தந்தனஞ் சங்கை யநக னிளையனற் றாடரற்கே.
(8)
தரங்கனந் தார னனியேற் றெழிற்செந்திற் றந்தைநிரந்
தரங்கனந் தாரக நாடினென் றேநினை சத்தியரந்
தரங்கனந் தார நகரீசர் சேய்கிரித் தையலர்க்கந்
தரங்கனந் தாரள கஞ்சிற் றிடைசல சங்கண்களே.
(9)
சங்கங் களங்கழ னிக்கரை சேர்செந்திற் றங்கினநஞ்
சங்கங் களங்கர நண்ணரன் சேயெய்தச் சார்ந்தனஞ்சற்
சங்கங் களங்க னியைநிகர் தண்ட தரற்கினிய
சங்கங் களங்க ரெனநின்ற யாங்கணெஞ் சங்கரைந்தே.
(10)
கரத்தரிக் கங்கணங் கட்டர னார்தந்த கந்தாழ
கரத்தரிக் கங்கணங் கண்டசெய்ச் செந்திலெங் காங்கெயர்சா
கரத்தரிக் கங்கணங் கட்கய னார்க்கெழிற் காசணிசே
கரத்தரிக் கங்கணங் கற்றிடத் தாங்கினர் கைச்சத்தியே.
(11)

7. சாரங்கம்-மான். சங்கரி-இறைவி. சாரங்கம்-சார்ங்கம் என்னும் வில். தாங்கினன்சேய்-காமன். சார் அங்கம்-பொருந்தியஉடல். சங்கரியா-கொன்று. ஆசாரம்-சீலம். கஞ்சம்-தாமரை. 8. சங்கை அணிகரர்-வளையலையணிந்த கையை உடைய பெண்கள். தடங்கண்-விசாலமானகண். அலைதந்தனம்-அலைந்தோம். செய்யாள்-திருமகள். சங்கை அகல் ஐயம் நீங்கிய. தனித்தந்தன்-ஒற்றைக் கொம்பை யுடையவன். அருகன்-தீவினையற்றவன். 9. தரங்கம்-அலை. நந்து-சங்கு. ஆரல்-மதில். நிரந்தரம்-எக்காலத்தும்: தாரகம்-பிரமவடிவம். அந்தரம் நந்தார்-அந்தரங்கத்திலே கெடுதலின்றி விளங்குகின்றவர். சேய் கிரித்தையலர்-முருகனுடைய மலையில் இருக்கும் பெண். தார் அளகம் கனம்-மாலையை அணிந்த கூந்தல் முகிலைப் போலும். சிற்றிடை அந்தரம்-சிறிய இடை விண்ணைப் போன்றது. சலசம்-தாமரை. 10. சங்கங்கள்-சங்குகள். நஞ்சம்-நஞ்சு. கம்-தலை. களம்-கழுத்து. கரம்-கை. நண்-பொருந்திய. சற்சங்கம் சார்ந்தனம்-நல்லகூட்டத்தைச் சேர்ந்தோம். தண்டதரன்-இயமன். களங்கர்-குற்றத்தையுடையவர். 11. அரிக்கங்கணம்கட்டு-பாம்பாகிய காப்பைக் கட்டிய. அத்தர்-தந்தை. இக்கு-கரும்பு. அங்கணம்-சேறு. காங்கேயர்முருகர். சாகரத்து அரி-பாற்கடலில் எழுந்தருளிய திருமால். எழில் காசு அணி-அழகிய மணிகளால் அழகுசெய்யப்பட்ட. சேகரத்துஅரி-முடியை உடைய இந்திரன். அணங்கு-வருத்தம். கைச்சத்தி தாங்கினர்-கையில் வேற்படையை ஏந்தினார்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்