3. திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி |
|
|
சத்திக் கரத்த னகச்சேயங் கத்தினைத் தந்தனனற் சத்திக் கரத்த னகச்சிலை யாளிதன் றாளிணைநே சத்திக் கரத்த னகத்தியைந் தேத்தரன் றந்தகதிர்ச் சத்திக் கரத்த னகசெந்தி லாய்நின் சரண்சரனே.
|
(12) |
|
|
சரிதங்கை யாரக் கலன்றந் தனந்தரித் தார்நரகே சரிதங்கை யாரக் கரிடத்தி னார்தந்த தண்செந்தினே சரிதங்கை யாரக் கணத்தின்னல் கைத்தல் சரதந்தஞ்சீர்ச் சரிதங்கை யாரக் கசிந்திசைக் கின்ற தகையினர்க்கே.
|
(13) |
|
|
இனனந்தி யங்கி நிகர்த்தசெங் கேழன்மை யீரிரண்டா யினனந்தி யங்கிரி யைச்சிலை யாக்கிதன் சேயெழிற்செய் யினனந்தி யங்கி யிருங்கஞ்சஞ் சேர்செந்தி லெந்தைதளை யினனந்தி யங்கிசை யக்கதி யீந்தன னென்றனக்கே.
|
(14) |
|
|
தனக்கடங் காரெயில் செற்றகங் காளன் றனயனங்கந் தனக்கடங் காதிழி தந்திக் கிளையன் றளிரெழிற்சந் தனக்கடங் காநிறை செந்திலி னற்சேய் சயிலநங்கை தனக்கடங் காணினச் சாரிலை யண்ண றரணியிலே.
|
(15) |
|
|
|
12. சத்திக்கர-வலிமையுடைய முதலை, அகச்சேய்-வயிற்றில் இருந்த பிள்ளை. சத்திக்கு அரத்தன்-உமாதேவிக்குச் செந்நிறமாக விளங்குபவன். நகச்சிலையாளி-மகாமேருமலையை வில்லாக ஆண்டவர்: நேசத்து இக்கர் அத்தன்-அன்பினைக் கருப்பு வில்லிலே வைத்த காமனுக்குத் தந்தை. அகத்து இயைந்து ஏத்து-மனம் பொருந்தப் போற்றுகிற. கதிர்ச்சத்தி-ஒளியையுடைய வேற்படை. 13. சரி-வளையல். ஆரக்கலன்-முத்துமாலையாகிய அணிகலன். நரகேசரி தங்கையார்-மனிதமடங்கலாகத் தூணில் தோன்றிய திருமாலின் தங்கையார். அக்கர்-சங்குமணியை அணிந்த பரமசிவன். இதம்கையார்-இன்பத்தை வெறாது செய்வார். இன்னல் கைத்தல் சரதம்-துன்பத்தை வெறுத் தொழித்தல் உண்மை. கைஆர-ஒழுக்கம் பொருந்தும்படி. அன்பினையுடையவர்கட்கு முருகக்கடவுள் இன்பினைச் செய்தல் உண்மை என்று கூட்டுக. 14. இன்அந்தி-இனிதாகிய செவ்வானம். அங்கி-தீ. நிகர்த்த-ஒத்த. செங்கேழன்-செந்நிறத்தையுடையவன். ஆய்இல்நந்தி-மாதாவை யில்லாத நந்தி. அம்கிரி-அழகிய மகாமேருமலை கஞ்சம் சேர்-தாமரையை அடைகின்ற. தளையின்நந்தி-பாசத்தினால் வருந்தி: 15. எயில் செற்ற-மும்மதில்களையும் அழித்த. கங்காளன்-முழு வெலும்பையுடையவன். கடம்-மதம். தந்திக்கு-ஆனை முகக் கடவுளுக்கு. சந்தனக்கடம்-சந்தன மரக்காடு. கா-பூஞ்சோலை. சயில நங்கை-மலையிலிருக்கும் பெண். தனக்கடம் காணின்-கொங்கைகளாகிய குடங்களைக் கண்டால். தரணியில் நச்சார் இலை-உலகில் விரும்பாதவர்கள் இலர்.
|
|
|
|