முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
3. திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி
சந்தத்த னத்திக டந்திறத் தாசை தலத்தினிச்சை
சந்தத்த னத்தி னசைதீ ரடியன் றனதிலிற்சேர்
சந்தத்த னத்தி யதளான் றனய தடக்கயல்கஞ்
சந்தத்த னத்தி னினங்கீ ழிழிசெந்திற் றங்கினற்கே.
(21)
தங்கச் சினகர நேராக் கலந்திச் சகநிறைந்தார்
தங்கச் சினகர நேயர் தனயன் றனக்கினிதாந்
தங்கச் சினகர நீள்செந்தி னாட்டிற் றனகரிதந்
தங்கச் சினகர நற்கன னென்னங்க டையலர்க்கே.
(22)
அலரிந னந்தலை யாழிகண் டாங்குச் சிகியினிடை
யலரின னந்த நிகரயி லான்செந்தி லாயிழையை
யலரின னந்த நினைநிலந் தேர்ந்ததற் கன்றயலா
ரலரின னந்தஞ் சொலற்கிட னாநெஞ் சழிகின்றதே.
(23)
தேயத் தியங்கி யலகி றலங்களிற் சென்றடிகள்
தேயத் தியங்கி யலைய றிடங்கதி சேர்தலறைந்
தேயத்தி யங்கின நித்திலந் தானெறி செந்திலடைந்
தேயத்தி யங்கி தரித்தான் றனயற் றெரிசிக்கினே.
(24)
சிக்கத் தனங்க டிறக்கின்ற கன்னியர் சிந்தைகணே
சிக்கத் தனங்க ளளித்தழிந் தேற்கெழிற் செந்திறரி
சிக்கத் தனங்க ழலையேத்த நல்கினன் சீர்நிறைகா
சிக்கத் தனங்க ளகிலேசன் றந்த திறற்கந்தனே.
(25)

21. சந்தத் தனத்திகள்-சந்தனத்தை அணிந்த கொங்கைகளையுடைய பெண்கள். தலத்தின் இச்சை-மண்ணாசை. சந்தத் தனத்தின்நசை-அழகிய பொன்னாசை. அடியன்-சுந்தரமூர்த்திகள். சந்து-தூது. அத்தி அதளான்-யானைத்தோலையுடையவன். தடக்கயல்-பெரியகயல் மீன்கள். முருகப் பெருமானே எனக்கு மூவாசையையும் போக்கியருளும் எனக் கூட்டுக. 22. அச்சு-உயிர் எழுத்து. கச்சிநகரம்-காஞ்சி மாநகர். தங்கச் சினகரம்-பொன்னாலாகிய கோயில். கரிதந்தத்தனம்-யானைக் கோட்டைப் போன்ற கொங்கை. கச்சில் நகர-கச்சிலிருந்து பிதுங்குதலுக்கு. நற்கனன்-நல்லகனம். இது செவிலி தலைவியினிடத்து ஐயங் கொண்டு பாங்கியை வினாவல். 23. அலரி-கதிரவன். நனந்தலை-நடுவிடம். ஆழி-கடல். சிகியினிடை-மயிலூர்தியில். அலர் இனன்-விளங்குந்தலைவன். அயிலான்-வேற்படையை உடையவன். செந்தில் ஆயிழை-திருச்செந்தூரில் இருக்கும் பெண். ஐஅலர்-ஐந்துமலர்க் கணைகள். இனல்நந்த-துன்பங்கெட. அலரின் அனந்தம். பழிமொழிகளிற்பல, இஃது அலரறி வுறுத்தல். 24. இயங்கி-சென்று. அலகில்-கணக்கில்லாத. தியங்கி-மயங்கி. அறைந்து-ஆரவாரித்து. அத்தி-கடல். இனம்நித்திலம்-கூட்டமாகிய முத்துக்கள். ஏய்-அங்குபொருந்திய. அத்தி அங்கி தரித்தான்-எலும்பையும் தீயையும் அணிந்தவன். 25. சிக்க-தம்மிடத்தில் அகப்பட. நேசிக்க-விரும்ப. கழலை ஏத்த-திருவடிகளைப் போற்ற. அகிலேசன்-விசுவநாதன்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்