முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
3. திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி
கந்தரங் கானந்த னிற்சென் றடங்கிலென் காசிக்கநே
கந்தரங் கானந்த நண்ணிலென் கன்னியர் கட்டளக
கந்தரங் கானந்த நின்றா டெழிற்செந்திற் கண்டிறைஞ்சிக்
கந்தரங் கானந்த நல்கச் சனனங் கடந்திலரே.
(26)
கடனந்தி னாகத் தகளாடை யாயெனைக் காக்கனிற்கே
கடனந்தி நாணிறத் தாயென நாரணன் கண்டிறைஞ்செங்
கடனந்தி நாதன் றனயனற் செந்திலிற் காரிகையே
கடனந்தி னாயகங் காதலர் தேரிற் கலிக்கின்றதே.
(27)
கணக்காக நாய்கடின் காய நிலையெனக் கண்ணியென்ன
கணக்காக நானலைந் தெய்த்தே னெழிற்செந்திற்கந் தநெற்றிக்
கணக்காக னார்தந்த நின்றனை யேயினிக் காதலினாற்
கணக்காக னாநிகர்த் தேயழி யங்கத்தின் காதலற்றே.
(28)
காதலை யானின் றனக்காக் கினனினிக் காயந்தந்தே
காதலை யானின் றனக்கா ரணனடிக் கஞ்சங்கணீங்
காதலை யானின் றகங்கரைந் தேத்தரன் கண்ணியராக்
காதலை யானின்ற சங்கரன் சேய்செந்திற் காங்கெயனே.
(29)

26. கந்தரம்-முழை. கால்நந்த-கால்வருந்த. கந்தரம்-முகில்-அளகம்-கூந்தல்.சனனம் கடந்திலர்-பிறப்பைப் போக்காதவர்கள். 27. கடம்நந்து இல்-மதங்கெடுதலில்லாத. நாகம்-யானை. அதள்-தோல். அந்தி நாள்- செக்கர் வானம். காரிகை-பெண். கடல் நந்தின் நாயகன்-கடலில் தோன்றிய சங்குகளுடைய தலைமையாகிய வலம்புரி. கலிக்கின்றது-ஒலிக்கின்றது. 28. கணக்காகம்-கூட்டமான காகங்கள். கண்ணி-எண்ணி. எய்த்தேன்-இளைத்தேன். அக்கு ஆகனார்-எலும்பு மாலையை அணிந்த உடலையுடையவர். 29. காயம் தந்து காதல்-உடலைக் கொடுத்துக் கொல்லாதீர். ஐயான்-சூக்குமரூபி. கண்ணி அரா-பாம்பாகிய மாலை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்