முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
4. பழமலையந்தாதி
கடிக்கஞ் சமனை யுவந்துல காக்குறுங் காரணனோர்
முடிக்கஞ் சமனை தொறும்பலி யேற்ற முதுகிரியான்
மிடிக்கஞ் சமனை வருந்தொழ வாழ்வும் விரவுறுமெங்
குடிக்கஞ் சமனை வெருவுத லேயின்று கொல்வனென்றே.
(11)
கொல்லைக் குறவரை வாயனை யார்க்கரிக் கோட்டைவிளை
நெல்லைக் குறவரை யாதுகொள் காளத்தி நேயரைவான்
தில்லைக் குறவரை நம்முது குன்றரைச் சேர்வலென்றூர்
எல்லைக் குறவரை மாத்திரைக் கேநல மீகுவரே.
(12)
ஈகையி லங்கை தவமுள மெங்ஙன மெய்துவமென்
றோகையி லங்கை வடிவே லொடுவருந் தோன்றறந்தை
வாகையி லங்கை யரசிற வூன்றிய வள்ளன்மழு
மாகையி லங்கைம் முகமுது குன்றன் மலர்ப்பதமே.
(13)
பதம்பர வைக்கு வருந்துபி ராற்குப் பசுமயின்மேற்
கதம்பர வைக்கு வரச்சுற்று கட்செவிக் கங்கணற்குச்
சிதம்பர வைக்கு முதுகுன்ற வாணற்குச் செல்வமெல்லா
மதம்பர வைக்கு நிகர்கரித் தோறலை மாலைகளே.
(14)

11. கடிகஞ்சம்-மணம் பொருந்திய தாமரை. மனை-வீடு. உல்கு ஆக்குறும்-உலகைப் படைக்கும். ஓர்முடி-ஒருதலை. முதுகிரியான்-பழமலையான். கஞ்சம்-வெண்கலப்பாத்திரம். மிடிக்கு அஞ்சம்-வறுமைக்குப் பயப்படமாட்டோம். கஞ்சம், ஐயக்கடிஞையை உணர்த்துவதால் ஆகுபெயர். 12. வாய் அனையார்-வாய்ந்தவேட மங்கையர். கரிக்கோட்டை-யானைக்கொம்பை. குற-குற்றுதற்கு. குற-இடைக்குறை. வரையாது கொள்-நீக்காமல் கொள்ளுகின்ற. உறவர்-உறவாக இருப்பவர். 13. கைதவம்-வஞ்சனை. வாகை இலங்கைஅரசு இற-வெற்றிமாலையை அணிந்த இராவணன் இற்றுவிழ. மழு-பரசு. மா-மான். 14. பதம்-அடி. பரவை-பரவை நாச்சியார். கதம்பர்-கடம்பமாலையை அணிந்தவர். கட்செவி கங்கணற்கு-பாம்புக் காப்பை யுடையவனுக்கு. சிதம்பர ஐ-சிதம்பரத்தில் வீற்றிருக்கும் தலைவர். மதம்-மதநீர். பரவைக்கு நிகர்-கடலுக்கு ஒப்பு. கரித்தோல்-யானைத்தோல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்