முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
4. பழமலையந்தாதி
கேட்டுப் புவனங் கொளவுமெண் ணோமெய்க் கிராதனின்முன்
நாட்டுப் புவனம் பயின்மான் றசையுண்ட நாதனராப்
பூட்டுப் புவனங் கொளுமெய்ப் பழமலைப் புண்ணியன்றாள்
வேட்டுப் புவனம் பதினான்கு நல்கினும் வேண்டிலமே.
(19)
வேண்ட வடுக்க நினைவதுன் றாண்மலர் வேட்கைமணி
பூண்ட வடுக்க ணறுநுத லார்மயல் போக்குவது
நீண்ட வடுக்க னயமா திளமுலை நேர்ந்துதவ
மாண்ட வடுக்க ணிகர்தோட் பழமலை மன்னவனே.
(20)
மன்னவ மாதவ னாடும் பழமலை வாணமணி
அன்னவ மாதவ னன்மலைக் காற்கசைந் தம்மதிகண்
டென்னவ மாதவ னல்லின்வந் தானென் றிரங்கிமதன்
றின்னவ மாதவ நோமேயென் செல்வத் திருந்திழையே.
(21)
திருந்திய வேதம் புகல்பரி சேயறஞ் செய்துடலம்
வருந்திய வேதம் பொருளென வாழ்பழ மாமலையான்
பொருந்திய வேதந் தருநஞ் சுணானெனிற் பூமலர்கா
மருந்திய வேதம் புயமனை யாட்கணி மங்கலமே.
(22)
மங்கல மாவி மலைசேர் பழமலை வாணமணிச்
செங்கல மாவி மலர்க்கைக் குருகொடு செல்கவெமர்க்
கிங்கல மாவி வளைநீ யணைந்த தினியுனெதிர்
தங்கல மாவி தரிற்கொடு சேறுமெந் தண்மனைக்கே.
(23)

19. மெய்க்கிராதன்-உண்மையன்பு வாய்ந்த திண்ணனார். துப்பு-சுவையாராயப்பட்ட. அராபூண்-பாம்பணி. துப்பு-பவழம். உப்புவனம்-உப்பிட்டநீர். 20. அடுக்க நினைவது-அடைய எண்ணுவது. நீண்ட அடுக்கல்-நெடிய இமயமலை. மாண்டவடுக்கள்-மாட்சிமைப்பட்ட தழும்புகள். நறுநுதலார்மயல்-நல்லநெற்றியை உடைய பெண்களுடையமயக்கம். 21. மாதவன்-திருமால். திருந்திழை-திருந்திய அணிகலன்களையுடைய பெண். மாதவன்-பெருமை தங்கிய தவத்தையுடைய அகத்தியர். அம்மதி-அழகிய திங்கள். நவம்-புதுமை. ஆதவன்-கதிரவன். மதன்-காமன். 22. புகல்பரிசே-கூறுகிற முறைப்படியே. ஏதம்தரும்-துன்பத்தைக் கொடுக்கும். காமர் உந்திய-அழகிய நாபியை உடைய திருமாலே. அம்புய மனையாட்கு-தாமரை மலரில் எழுந்தருளிய இல்லாளாகிய திருமகளுக்கு.23. மங்கலமா-சிறப்பாக. விமலை-விருத்தாம்பிகை. எமர்க்கு-எம்முடைய உறவினர்க்கு. அலமா-துன்பமுண்டாக. ஆவிமலர்-தடாகத்திற் பூத்த தாமரை மலரைப் போன்ற. கைகுருகு-கையிலணிந்த வளையல். தங்கலம்-நிற்க மாட்டோம். சேறும்-செல்லுதும்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்