முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
4. பழமலையந்தாதி
தண்டங் கமண்டலங் கொண்டு பழமலைச் சங்கரதாட்
புண்டங்க மண்டலங் கண்டுசென் றாலுமெய்ப் போதமுறார்
பண்டங் கமண்டலங் காரமின் னாக்கினன் பாட்டியலைக்
கொண்டங் கமண்டலம் பாழாக் கியவுனைக் கூறலரே.
(24)
கூற்றைக் கொடியங் கடப்பா னருளெனக் கூய்ப்பரவி
ஏற்றைக் கொடியங் கரஞ்சேர் பழமலை யீசனணி
நீற்றைக் கொடியங் குளமே வெறுத்தி நிறைபெருகும்
ஊற்றைக் கொடியங் கினமோ டருந்து முடம்பினையே.
(25)
உடற்கு வலையந் தகன்கைக் கயிறென் றுணர்ந்துளமே
கடற்கு வலையம் புகழ்சீர் முதுகிரிக் கண்ணுதற்கு
மடற்கு வலையம் புரைகளத் தாற்குநம் மன்றமர்ந்த
நடற்கு வலையம் பணியா மவற்கன்பு நண்ணுகவே.
(26)
நட்டுவ னாரை யறிகிலன் றண்ணுமை நந்திநின்று
கொட்டுவ னாரை யிரைதேர் கயமுது குன்றுடையாய்
தட்டுவ னாரை யகலாத நான்முகன் றாளமுயர்
குட்டுவ னாரை வனைவான் பரவுநின் கூத்தினுக்கே.
(27)
கூத்துகந் தம்பல மேவுறு மோர்முது குன்றனைநம்
பாத்துகந் தம்பல மாரினு மெள்ளினும் பண்பனைத்தாள்
சாத்துகந் தம்பல மாமறை யாற்புகழ் தாணுவைநாம்
ஏத்துகந் தம்பல மார்பொது மாதரை யெள்ளினமே.
(28)

24. தாள் புண் தங்க-கால்களிலே புண்படுமாறு. மண்டலம்-உலகிலுள்ள பலதலங்கள். மெய்ப்போதம்-உண்மை அறிவு. பண்டு-முன்னாளில். அங்கம்-எலும்பு. மின்-மின்னற் கொடி போன்ற பெண். ஆக்கினன்-திருஞானசம்பந்தர். அமண் தலம்-சமணர்கள் இருந்த இடம். 25. கொடியம்-கொடுமையை உடைய யாம். ஏற்றைக் கொடி-இடபக் கொடி. ஊற்றை-மலங்கள் நிறைந்த ஊற்றையுடைய. கொடி-காக்கை. இனம்-சுற்றம். ஏற்றுக்கொடி-ஐகாரச் சாரியை பெற்று நின்றது. 26. உடற்கு வலை-உயிராகிய பறவையைப் பிடித்தற்கு வலை. கடற்கு வலையம்-கடலாற் சூழப்பெற்ற உலகம். மடல்குவலையம்-மடலையுடைய குவளைமலர். புரை-ஒத்த. களம்-கழுத்து. மன்று-தில்லைமன்று. நடற்கு-கூத்தையுடையவர்க்கு. பணி ஆம் வலயம்-பாம்புகளாகிய கடகம். 27. நட்டுவனார்-ஆட்டிவைப்பர். தண்ணுமை-மத்தளம். கயம்-குளம். நாரை அகலாத-அன்பை நீங்காத. தட்டுவன்-அடிப்பான். குட்டுவன்-சேரன். ஆரைவனைவான்-ஆத்திமாலையை அணியுஞ் சோழன். பரவும்-போற்றும் 28. நம்பா-நம்முடைய பாடல். துகந்து-கசந்து. அம்பலம் ஆரினும்-அவையிலேறினாலும். தாள்சாத்துபண்பன்-திருவடியில் அணிந்து கொள்ளுகிற குணமுடையவர். தாணுவைஏத்துகம்-தாணுவாகிய சிவபெருமானைப் போற்றக் கடவோம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்