முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
4. பழமலையந்தாதி
எள்ளா தவனை யெலும்பா பழமலை யென்றிருந்த
கள்ளா தவனை மகவரிந் தாக்கெனக் கட்டுரைத்து
விள்ளா தவனை மகிழ்பர மாவழல் வெண்மதியைத்
தள்ளா தவனை முடிசூடெம் மாது தருக்குதற்கே.
(29)
தருவி னிலையினி மன்னவற் கில்லையித் தண்புனத்தில்
மருவி னிலையினி மைக்கூற் றெனக்கந்தி வானநிகர்
உருவி னிலையி னியல்வேற் குகனை யுதவியகோன்
கருவி னிலையி னிகந்தோன் பழமலைக் காரிகையே.
(30)
காரிகை யார்க்கு வரும்பொது வோவல்ல காண்விசும்பிற்
பூரிகை யார்க்கு முதுகுன்ற நாயகன் பொங்குமருள்
வாரிகை யார்க்கு மருந்தனை யான்மலை மன்னனருள்
நாரிகை யார்க்கு மெழுவுறழ் தோட்க ணறுநுதலே.
(31)
நுதலரிக் கும்பரு வங்குறை என்றவ னோக்கடையா
முதலரிக் கும்பரு மேத்துந் தமிழர் முருகுபெரு
குதலரிக் கும்பரு கற்கருங் காமுது குன்றரிலார்
சிதலரிக் கும்பரு மாமரம் போற்றுயர் தின்பவரே.
(32)
தின்னக் கனியை விழைகூ னிளமந்தி தீங்கனியீ
தென்னக் கனியை யிரவியிற் பாய்பொழி லீண்டுகுன்றை
நன்னக் கனியை மதிவே ணியனிந்த நாம்பயந்த
சின்னக் கனியை வலத்தில்வைத் தால்வருந் தீங்கென்னையே.
(33)
தீங்கு திரைக்கட னேர்நரர் காடுயர் செய்மலத்திற்
காங்கு திரைக்கட நாய்க்கிரை யென்றிந்த வாகமயல்
நீங்கு திரைக்கட நன்முது குன்றர்க்கந் நிம்பனுக்கு
வாங்கு திரைக்கட னீயவல் லார்க்கு வணங்குமினே.
(34)

29. எள்ளாத-இகழாத. வனை-அழகு செய்யப்பட்ட. தவனை-தவமுடைய சிறுத்தொண்டனை. தருக்குதற்கு-களித்து வாழுதற்கு. ஆதவனை சூடு-கதிரவனை அணிந்துகொள். 30. தரு-மரம். அந்திவானம் நிகர்-செவ்வானத்தைப் போன்ற. ஐயின்இயல். அழகின் இயற்கையைப் படைத்த. இகந்தோன்-நீங்கியவன். 31. பூரிகை ஆர்க்கும்-பூரிகை முதலிய வாத்தியங்கள் முழங்கப்படுகிற. கையார்க்கு-வெறுக்காதவர்கட்கு. மருந்து-அமுதம். எழுஉறழ்-எழுத்தம்பத்தைப் போன்ற. மருந்தனையான் தோட்கள் என இயையும். 32. நுதல்-சொல்லப்பெறும். அரி-திருமால். முதலர்-முதற்கடவுள். கும்பர்-அகத்தியர். முருகு-தேன். அரிக்கும்-வண்டுக்கூட்டங்கட்கும். அரும்கா-உயர்ந்த சோலைகள். முதுகுன்றர் இலார்-பழமலை நாதருடைய அருளைப் பெறாதவர்கள். சிதல்-கறையான். பருமாமரம்-பருத்த மாமரம். 33. கன்னி ஐ இரவியில்-குறையாத அழகையுடைய கதிரவனிடத்தே. ஈண்டு-நெருங்கிய. நக்கன்-நிருவாணி. மதி இயை வேணியன்-திங்கள் பொருந்திய சடையை உடையவர். பயந்த-பெற்ற. சின்னக்கனி-சிறிய கன்னிகையாகிய பெண். 34. நரர்காள்-மனிதர்களே! மலத் திற்கு ஆம் குதிர்-மலத்திற்கான கூடு. ஐ கடம்-கோழைகள் நிரம்பிய குடம். ஆகம் மயல்-உடற்பற்று. ஐ கடம்-அழகிய காடுகள் சூழ்ந்த. நிம்பன்-வேப்பமாலையை அணிந்த பாண்டியன். வாம் குதிரைக்கடன்-தாவுகிற குதிரைகள் கொடுக்க வேண்டிய கடன்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்