முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
4. பழமலையந்தாதி
மாசி யதிகந் துறந்தார் மகிழ்குன்றை மாநகரோ
காசி யதிகங் கொலோவென்பி ராயினக் காசியெனப்
பேசி யதிகந் தகன்றிருந் தான்பரன் பேரடலை
பூசி யதிகம் பரனீங்கி லானிப் புரியினையே.
(44)
புரிசடை யாள பழமலை வாண பொருப்பெடுத்த
கரிசடை யாள திகந் தீர்த் தருளக் கடுவயின்ற
பரிசடை யாள முடையா யொழித்தனள் பட்டினையத்
துரிசடை யாள தழுக்கா மெனாநின் றுகிலினுக்கே.
(45)
துகிலங் குருகுந் துறந்தா ளுயிருந் துறக்கநின்றாள்
அகிலங் குருகு மணிமுடி யாயெனு மத்தவளை
முகிலங் குருகு மடியாய் பரந்த முதுகிரியாய்
சகிலங் குருகுல மேத்திறை வாமைத் தடங்கண்ணியே.
(46)
தடுக்க மலத்தி னொடுங்குதல் போலநின் றாளிலுறும்
ஒடுக்க மலத்தி னிகழ்வால் வளையின மூர்ந்திடச்சேல்
மடுக்க மலத்தி லுகள்வயல் சூழ்குன்றை மாநகரோய்
அடுக்க மலத்தி புனையலங் கார வருளுகவே.
(47)
அருவரை வில்லை யுமிழ்பணி நாகமு மத்திகளும்
உருவரை வில்லை யெனப்பூண் பவரையவ் வும்பர்தொழும்
பொருவரை வில்லை யுறுமுது குன்றரைப் போந்துமருள்
ஒருவரை வில்லை வரிலொற்றி வையென வுற்றனமே.
(48)
உற்கைக்கு மாறு படுமணி நாக மொளித்துலவி
விற்கைக்கு மாறு சுமந்தவ சீர்முது வெற்பினின்பால்
நிற்கைக்கு மாறு வழுவா நடக்கைக்கு நேரிழையார்
சொற்கைக்கு மாறுந் தமியேனுக் கென்று துணைசெய்வையே.
(49)

44. மாசி மகிழ்-மாசித் திங்கள் வரவை விரும்பும். பேர் அடலை பூசிய திகம்பரன்-பெரிய சுடலைப்பொடியைப் பூசிய திகம்பரராகிய சிவபெருமான். 45. புரி-கட்டிய. பொருப்பு-கோவர்த்தனமலை. அதிகம் தீர்த்தருள-பரத்துவ உயர்ச்சியைப் போக்கியருள. கடு அயின்ற-நஞ்சையுண்ட. பரிசு-தன்மை. துரிசு-குற்றம். துகில்-ஆடை. 46. அகிலம்-உலகில்உள்ளார். குருகு-கொக்கிறகு. வளைமுகில்-சங்கையேந்திய முகில்வண்ணனாகிய திருமால். சகிலம்-வரலாறு. குருகுலம்-குருவம்சம். 47. அலம்-கலப்பை. வளைஇனம்-சங்குக் கூட்டம். உகள்-பாய்கின்ற. அமல்-நெருங்கிய. அத்தி புனை-எலும்புமாலையை அணிந்த. 48. அருவர்-அரூபமானவர். வில்லை உமிழ்-ஒளியை வெளிப்படுத்துகின்ற. மணி நாகம்-மணியைஉடைய பாம்பு. வரைவு இல்லைஎன-நீக்கமில்லை யென்று சொல்லுமாறு. ஐவர் இல்-ஐம்புலங்களுடைய இருப்பிடம். 49. நாகம் ஒளித்து-பாம்பை மறைத்து. உற்கை-நெருப்புறு கொள்ளி. ஆறு-ஒழுக்கம். கைக்கும் ஆறும்-கசக்குந் தன்மையையும்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்