முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
4. பழமலையந்தாதி
சேவாலங் காட்டு பொழுதகஞ் சாயச் செலுத்திவரி
மாவாலங் காட்டு முதுகிரி வாணவவ் வானமுய்ய
வேவாலங் காட்டு மிடற்றாய்நின் சீர்த்தி விரித்துரையா
நாவாலங் காட்டு விலங்காயி னேனிந்த நானிலத்தே.
(65)
நிலங்கடந் தானை மகிழ்வானைத் தன்னடி நின்றொடுங்கும்
புலங்கடந் தானை முதுகுன்ற வாணனைப் போற்றிலர்தந்
நலங்கடந் தானை முழுது மிழந்தந் நகரினிற்போய்
இலங்கடந் தானை துணிசீரை யாக்கொண் டிரப்பர்களே.
(66)
இரப்பாரி லாரை யிலரெனின் வைவ ரிரந்திடிற்றாங்
கரப்பாரி லாரை முகநோக்கு றார்மழுக் கைக்குன்றையாய்
உரப்பாரி லாரை யுறவாகக் கொள்வர்தம் முள்ளனபோய்
நிரப்பாரி லாரை யவிப்பார்தம் மக்களை நீத்திருந்தே.
(67)
இருப்பு வலியை யகன்றுபொன் வல்லியை யெண்ணுதலாம்
விருப்பு வலியை முலையா ரணங்கினர் விண்ணுறுதல்
பொருப்பு வலியை யிடத்தில்வைத் தாய்மலர்ப் பூங்கணைசேர்
கருப்பு வலியை யொழித்தாய் பழமலைக் கண்ணுதலே.
(68)
கண்டந் தரிக்கும் விடத்தார் பழமலைக் கண்ணுதலார்
பண்டந் தரிக்கு மருங்களித் தார்தம் பழவடியார்
எண்டந் தரிக்கு மரிதாகும் பாத ரிருங்கருமா
வெண்டந் தரிக்கு மதற்காய்ந் தவரெனு மெல்லியலே.
(69)

65. சே-எருது. ஆலம் காட்டும் பொழுது-தண்ணீர் குடிப்பிக்கும் வேளையில். அகம்சாய-மனஞ்சோர. வரிமா-புலி. வானம்-தேவர்கள். ஆலம்-நஞ்சு. 66. நிலங் கடந்தான்-திருமால். போற்றிலர்-வணங்காதவர்கள். நலங்கள்-செல்வங்கள் தானை-படை. 67. இலாரை-இல்லறமுடையவர்களை. நிரப்புஆரில்-வறுமை மேலும் மிகுதிப்பட்டால். ஆரை அவிப்பார்-ஆரைக் கீரையை அவித்துத் தின்பார்கள். உரம்பாரில்-வலிய இவ்வுலகத்தில். ஆரை-எவரை. 68. பொருப்புவலி-மலைமகள். கருப்பு வலியை-கரும்பு வில்லின் வல்லமையை. வல்இயை-சூதாடுகருவியை ஒத்த. இருப்புவலி-இருப்பு விலங்கு. பொன்வல்லி-பொன்விலங்கு. 69. கண்டம்-கழுத்து. சுந்தரி-உமாதேவி. மருங்கு-பக்கம். எண்தந்து-கருத்தை முடித்து. அரிக்கும்-திருமாலுக்கும். இரு-பெரிய. கருமா-பன்றி. இக்குமதன்-கரும்புவில்லைடைய காமன்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்