முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
4. பழமலையந்தாதி
முன்னஞ் சிலம்பு சிலையாக் கியநன் முதுகிரியாய்
பொன்னஞ் சிலம்பு சிலம்புத லோடையிற் பூஞ்சிறகர்
அன்னஞ் சிலம்பு நடையிள மானை யனங்கனெய்து
தன்னஞ் சிலம்பு குவளையல் லாத தணந்தனனே.
(75)
தணந்தவ ளக்கரி மேனிய ளாங்கொல்வெண் சங்கினங்கண்
மணந்தவ ளக்கரி னின்றழு மோவல வாவுயிர்கள்
உணர்ந்தவ ளக்கரி தாமுது குன்றர னோங்கமர
கணந்தவ ளக்கரி யானேத் திறையன்றிக் காப்பிலையே.
(76)
காப்புக் கரியுந் திருமக ணாயகன் காப்பவற்றின்
பூப்புக் கரியுந் தலையுடை யானும் பொருந்தவைத்தான்
மாப்புக் கரியுங் குயிலும் பயில்பொழில் வண்டில்லையான்
மூப்புக் கரியும் புலியுங்கொன் றீர்ந்த முதுகுன்றனே.
(77)
முதுமறை யந்த முறுபொரு ளேநன் முழுப்பணிக்கு
விதுமறை யந்த முடியாய் புராணம் விளங்கிரண்டொன்
பதுமறை யந்த முதுகுன்ற வாணநின் பாதம்வணங்
குதுமறை யந்த கனைமார்பி லெம்மைக் குறுகிடினே.
(78)
குறுகு முனிவனை யன்றாண்ட விம்முது குன்றனுக்கு
மறுகு முனிவனை செய்தாலுய் வாரெவர் வந்தருளென்
றறுகு முனிவனை போதுமி டார்நம னார்முனிவு
முறுகு முனிவனை யெய்தா ரறிவறு மூடரினே.
(79)

75. சிலை-வில். சிலம்பு-மேருமலை. பொன்னம் சிலம்பு-பொற்சிலம்பு. அன்னம் சிலம்புதல் சிலம்பும்-அன்னங்கள் ஒலித்தலைப் போல ஒலிக்குமாறு, அனங்கன்-காமன். தணந்தனன்-தனது கணைகளை யெல்லாம் இழந்தான். 76. தணந்தவள்-பிரிந்த தலைவியானவள். மணந்த-கலந்த. அளக்கர்-கடல். வலவா-தேர்ப்பாகனே. நந்த-மிகவும் அளவிடுதற்கு. ஓங்கு அமரகணம்-உயர்ந்த தேவர் கூட்டம். தவளக்கரியான்-வெள்ளை யானையை உடைய இந்திரன். 77. காப்புக்கு-காத்தல் தொழிலுக்கு. அரியும் திருமாலும். பூப்புக்கு-படைத்தல் தொழிலுக்கு. அரியும் தலையுடையான்-வைரவக் கடவுளால் கிள்ளப்பட்ட தலையை உடைய நான்முகன். மா-மாமரங்கள். தில்லையான்-சிதம்பரத்தையுடையவன். மூப்பு-முதிர்ந்த. 78. முழுப்பணிக்கு-முழுப்பாம்புக்கு. விதுமறை-முடியிலுள்ள பிறை ஒளிக்கின்ற. இரண்டொன்பதும் அறை-பதினெட்டுப் புராணங்களும் போற்றுகின்ற. அறை-மோதுவாயாக. 79. குறுகு முனிவன்-அகத்தியர். மறுகும் முனிவு-மயங்குதற்கேதுவாகிய சினம். அனை-அன்னை. உனி-உன்னி. வனைபோதும்-மாலையாகக் கட்டப்பட்ட மலரும். முனிவு முறுகுமுன்-சினம் முதிர்வதற்கு முன்பாக. உனி-இடைக்குறை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்