முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
4. பழமலையந்தாதி
மூடா நமாதி மிரையடைந் தாயலென் முன்னணுகல்
மீடா நமாதி பெருமா னுதைக்கினு மெய்ப்புகழைப்
பாடா நமாதி யெழுத்தைந்து மோதிப் பழமலைவாழ்
வீடா நமாதி யடியா ரடியருண் மேவினமே.
(80)
மேவத் தகரை யிவர்மக வீன்றதொல் வெற்பரச
சேவத் தகரை வொடுபூசித் துன்னைவிண் செல்வமுறும்
பூவத் தகரை நகுவே மெமக்குநின் பொங்கருளால்
ஓவத் தகரை வகைப்பாச முந்தம் முரங்குலைந்தே.
(81)
குலையா நிலமும் விசும்புந் தொழுமுது குன்றமதிக்
கலையா நிலமும் மடியழல் காயவக் காய்கனலின்
மலையா நிலமு முடன்கூட வேமெனை வாங்குகழைச்
சிலையா னிலமு மெமதில்ல மாய்நின்று சீறுவனே.
(82)
சீறிரை யாக மதியுணும் பாம்பணி செல்வமறை
மாறிரை யாக மலிமுது குன்ற மருவுதற்குச்
சேறிரை யாகயி லாசவி லாசசு தேவவென்மின்
தோறிரை யாக நிலையென்று வாழன்மின் றொண்டர்களே,
(83)
தொண்டரைக் கூடல் விழையார் பொழின்மலர்த் தூளுதிர்தல்
விண்டரைக் கூட லறவுறல் போலுந்தொல் வெற்புறுமைக்
கண்டரைக் கூட லுடையாரைப் போற்றிலர் கற்றறியா
மிண்டரைக் கூடல் வழியே நடத்துபு வீழ்த்துவரே.
(84)

80. மூடா நமா-மூடனாகிய நமனே! திமிர்-ஆணவம். ஆயல்-ஆராயாதே. மீள்-மீண்டு விடுவாயாக! தாநம் ஆதி-இடமாவாய். நமாதி எழுத்து ஐந்து-திருவைந்தெழுத்து. நம் ஆதி-நமதுமுதற் பொருளாகிய இறைவன். 81. தகரை இவர்-ஆட்டுக்கடாவை ஊருகின்ற. மேவ-விருப்பமாக. சேஅத்த-காளையூர்தியை உடைய தலைவரே! கரைவொடு-நெகிழ்ந்துருகும் அன்போடு. பூவத்தகரை-உலக வியாபாரிகளை. நகுவேம்-இகழ்ந்து நகைப்பேம். ஓவதகர்-ஒழியும் படியாகச் சேதிப்பீராக. உரம்-வலிமை. 82. குலையா-குன்றுதலில்லாத. நில அழல் மும்மடிகாய-நிலவுத்தீ மூன்றுபங்கு அதிகமாகச் சுட. மலையாநிலம்-தென்றற் காற்று, கழைச்சிலை-கரும்புவில். இலம்-இல்லம்; வீடு. 83. மதி உணும்-திங்களைத் தின்னும். செல்வம் மறை-சிறப்பாகிய மறைகள். மால் திரை ஆக-பெரியஅலை கடல்போல. கயிலாச விலாச-கயிலாசமலையை உடையவரே. சுதேவ-நல்லதேவரே. திரை-திரைந்தழியும். ஆகம்-உடல். 84. கூடலை விழையார்-கூடியிருத்தலை விரும்பாதவர்கள். மலர் தூள் உதிர்த்தல்-மலர் மகரந்தப்பொடிகளை உதிர்த்தல். விண்-விண்ணுலகம். தரை-மண்ணுலகம். மைக்கண்டர்-கரியகழுத்தையுடையவர். கூடல் உடையார்-மதுரையை உடையவர். மிண்டர்-கீழ்மக்கள். ஐகூடு-கோழைக் கூடாகிய உடல். நடத்துபு-நடத்தி.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்