முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
4. பழமலையந்தாதி
வீழி வலஞ்சுழி தில்லை சிராப்பள்ளி வேதவனங்
காழி வலஞ்சுழி யன்மேவு குன்றைக் கடவுள்விடின்
ஆழி வலஞ்சுழி வெள்வளை யானணை யன்னகல்விப்
பாழி வலஞ்சுழி யுந்தியுள் வாங்குவர் பாவையரே.
(85)
பாவல ருக்கு மலிபொரு ளீந்துகொள் பாட்டினர்க்கு
மேவல ருக்கு மழுவார்க்கு நன்முது வெற்பினுக்குக்
காவல ருக்கு மயலாகி நின்று கலங்குகின்றாய்
ஆவல ருக்கு விளைநில மாயினை யாயிழையே.
(86)
ஆயக் கலையக லுஞ்சீர் முதுகுன் றரசமுனஞ்
சாயக் கலைய னிமிர்த்தசெம் மேனிய தப்பலில்லா
னேயக் கலைய புழுக்கூ டெனுமுட னேயமெல்லாம்
மாயக் கலைய மலமாயை கன்மங்கள் வந்தருளே.
(87)
வந்திக்க நாவி னினையே வழுத்த மலர்விழியால்
முந்திக்க னாவி தொலைத்தோய் நினது முதுவெற்பையே
சிந்திக்க நாவி மதநாறு மாதரைச் சேருமின்பம்
நந்திக்க னாவி னொழிவாமென் றுன்னுற நல்குதியே.
(88)
நல்குர வேநல் லுரைதான் முதுகுன்றர் நாட்டுனக்குச்
சொல்குர வேநல் குரவுறு வேல தொடைகள்பல
மல்குர வேன லிதண்விட் டகம்புக்க மானையிந்த
ஒல்குர வேனல் லிடைக்கொடு போகலென் றோதிலையே
(89)

85. சுழிஉந்தி-கூடற் சுழிகளை எழுதி. ஆழி-உருளைப்படை. வலம்சுழி வெள்வளை-வெள்ளிய வலம்புரிச்சங்கு. அணை அன்ன-படுக்கையாகிய ஆதிசேடனைப் போன்ற. பாழிவலம்-பெரியவன்மை. 86. பாவலர்-சுந்தரர் முதலியோர். மேவலர் உக்கும்-பகைவர்களை அழித்தொழிக்கும். மழுவார்-மழுப்படையை உடையவர். காவலர்-தலைவர். ஆ-வியப்பு. அலருக்கு-பழிச்சொல்லுக்கு. 87. கலை அகலும்-கலையறிவுகட்கு அப்பாற்பட்டு நிற்கும். கலையன்-குங்குலியக் கலைய நாயனார். தப்பல் இல்லான்-சாக்கிய நாயனார் கல்ஐய-கற்களையுடைய தலைவரே. 88. இக்கன் ஆவி-காமனுடையஉயிர். நாவி-கத்தூரி. நந்தி-அழிந்து. உன்னுற-நினைக்க. 89. குரவு-குராமரம். நல்குரவு உறு-நல்ல குராமாலையை அணிந்த. ஏனல்-தினை. பலதொடைகள்-பலகட்டுக்கள். இதண்-பரண். அகம்புக்க மானை-இல்லடைந்த தலைவியை. அல்லிடை-இராப்போதில். ஒல்குரவு-இழிதொழில்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்