முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
4. பழமலையந்தாதி
ஓதித் திருக்கு மொழிவதல் லாமலுன் னுண்மைநிலை
சாதித் திருக்கு மியல்புதந் தாயிலை தன்மையெல்லாம்
போதித் திருக்கு மொழிகுன்றை வாண பொருப்புதவுஞ்
சோதித் திருக்கு மரிபாக சுந்தரன் றூதுவனே.
(90)
தூதுகண் டாலு மதியணி வேணியர் துன்னிவந்தென்
காதுகண் டாலு முடன்மூக்கின் பெய்தநல் காரெனவெம்
மாதுகண் டாலு முவக்கப் படுமொழி வந்தனள்கார்ப்
போதுகண் டாலு மயில்வாழ் பொழிற்பழம் பூதானே.
(91)
பூதர நன்று சிலைக்கென்று கொள்ளும் புராந்தகனார்
சீதர னன்று பொழிலெனுங் குன்றைத் திருநகரார்
காதர னன்றும் விழிபெறு மாறுடைக் கண்ணுதலார்
மாதர னன்று வருமதிக் கோய்தலை மாற்றிலரே.
(92)
மாற்குச் சிவந்த மலர்த்தாண் முதுகிரி வாணன்மறை
நூற்குச் சிவந்த விராப்பொரு ளென்பவர் நோக்குளன்வேள்
கோற்குச் சிவந்த விறலாள னின்னுங் குறுகிலனிம்
மேற்குச் சிவந்த தறியே னிவட்கு விளைவதுவே.
(93)
விளைய வளையு மணிநெல் வயன்முது வெற்பிறைவன்
அளைய வளையு முறவுடை யானவ் வனங்கசிலை
வளைய வளையு முடையுந் துறந்து வருந்துறுமிவ்
விளைய வளையு மொருபுடை சார விருத்திலனே.
(94)
இருத்த விருப்ப திடத்திலல் லாம லிருப்பலென
நிருத்த விருப்ப முதுகுன்ற வாணனை நீவலியுஞ்
செருத்த விருப்ப வுததியை யாருணச் சிந்தைசெய்வார்
திருத்த விருப்ப வலையாவர் மெல்லுவர் தேமொழியே.
(95)

90.0, ஓதி-நூல்களைக்கற்று. திருக்கு-மாறுபாடாக. தன்மை-அருட்டிறங்கள். பொருப்பு உதவும்-இமயமலைதந்த. சோதி திருக்குமரி-ஒளிதங்கிய அழகிய உமாதேவி. 91. துன்னிவந்து-நெருங்கிவந்து. தாலு-நா. நல்கார்-அருள் புரியார். கண்டு-கற்கண்டு. கார்ப்போது-கார்காலம். ஆலும்-ஆடுதலைச் செய்யும். பூதரன்-மலையை உடையான். 92. சிலைக்கு-வில்லுக்கு. சீதரன்-திருமால். காதரன்-தீவினைத்தொடர்பு உடையவன். அனன்றுவரும்-தழலைப் பரப்பிவரும். 93. மாற்கு-திருமாலுக்கு. உச்சி-தலை தவிராப் பொருள்-நீங்காப்பரம்பொருள். வேள் கோற்கு-காமன் கணைக்கு. குறுகிலன்-வரவில்லை. மேற்கு-கதிரவன் மறையுந் திக்கு. 94. அளைய அளையும்-அன்புகாட்டத் தாமும் அன்புசெயும். அனங்கசிலை-காமன்வில். வளை-வளையல். உடை-ஆடை. இளையவளையும்-இளம்பெண்ணையும். சார-பொருந்த. 95. இருப்பல்-இருக்கமாட்டேன். நிருத்தவிருப்பம்-கூத்தியற்றுதலில் விருப்பம் உள்ள. உப்பஉததி-உப்புக்கடல். இருப்பு அவல்-இரும்பாலாகிய அவல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்