5. பழமலை நாதர் பிச்சாடண நவமணி மாலை |
|
|
வேட்டன மாதுகை தாழ்த்திட மாமுது வெற்பர்பலி ஓட்டினை நீதொட லாமோ வெனவுமை யுந்தொடலாம் வீட்டினில் யானென வேயவர் தாமிது வேண்டுவைகொல் யாட்டினின் பாலென மூலமு மாமென்ப தென்றனரே.
|
(4) |
|
|
மாண்ட வெலும்பணி கோலமொ டேபலி வாங்கிடுதற் கீண்டு வருமுது குன்றுடை யீருமை யான்மிடற்றில் நீண்ட வுகிருறுத் தாதணை வேனென்று நீர்தலையைத் தீண்ட வுமது பலிப்பாத் திரமென் சிரிக்கின்றதே.
|
(5) |
|
|
வானோர் தொழுநின் பலிப்பாத் திரத்தை வனைந்ததுநீ தானோ வெனச்சக் கரந்தான் சுழற்றத் தகுங்குயத்தி யானோர் குயவன்மெய் யென்றே முதுகுன் றிறையியம்ப நானோ வொருசிற் றிடைச்சியென் றாளந் நறுநுதலே.
|
(6) |
|
|
பங்கய மன்ன விழியார் முதுகுன்றர் பாத்திரத்தில் அங்கையி லைய மொடுவண்டு வீழநல் கையவென எங்கையில் வந்த தெமதாக லேவழக் கென்றுசெட்டி மங்கையர் தங்கட் கிருங்கூ டலிலிட வைத்தனரே.
|
(7) |
|
|
நீருக்குத் தக்க சடையார் முதுகுன்றர் நேடியுங்கள் ஊருக்குட் பிச்சையென் றுற்றோமுண் டாயி னுரைமினென வாருக்குத் தக்க முலையா ரதற்குளர் மற்றொருவர் யாருக்குக் கிட்டு மதுசோறு நீர்கொளு மென்றனரே.
|
(8) |
|
|
|
4. உமை-உம்மை. உமாதேவி. வீடு-இல்லம். வீடுபேறு, ஆட்டினின் பால்இது வேண்டுவை கொல்லென என்று மாறுக. 5. மாண்ட எலும்பு-மாண்டுபோன நான்முகர் பலருடைய எலும்பு. மிடறு-கண்டம். உகிர் உறுத்தாது-நகம் தாக்காமல். தலையைக் கிள்ளும் தன்மையை உடையவர் என்பதை உணராமல் இவர் சொல்லை நம்பினளே இவளுடைய அறியாமை இருந்தவாறென்னேயென்று நகுதலை நகைத்தது என்க. 6. வனைதல்-செய்தல். சக்கரம், மட்சக்கரம், கண்ணாகிய அரம். சக்கு-கண். குயத்தி-குயச்சாதிப் பெண். கொங்கைகளையுடைய பெண், இளமையுடைய பெண், அல்குற்றேரையுடைய பெண், குயவன் என்பதற்கும் ஏற்ற பெற்றி சிறிது விகற்பித்து இப்பொருள் கொள்க. முதுகுன்று இறைஇயம்ப-பழமலையார் விடைகூற, பழமலைநாதர்கூற. சிற்றிடைச்சி-சிறிய இடையினையுடையவள், சிறிய இடைச்சாதிப் பெண். ஓர்-அறி, ஒரு 7. வண்டு-வளையல். பங்கயம் அன்ன-தாமரை மலரையொத்த. செட்டி மங்கையர் தங்கட்கு என்பது இனி வைசியப்பெண்களாய்ப் பிறக்கும் முனிமனைவியர்களாகிய தங்கட்கு எனவும் பொருள் தோன்ற நிற்கின்றது. கூடல்-புணர்தல்-மதுரை. 8. ஊருக்குள் பிச்சை-நகரத்தின்கண் பலி; மற்றொன்று இடக்கரடக்கல். அதற்கு ஊரு-தொடை. மற்றொருவர்-உமா தேவியார்; தங்கணவர்; அது யாருக்குக் கிட்டும்-அவ்வூருக்குட் பிச்சை எவர்க்குங் கிட்டாது. சோறு நீர்கொளும்-அவ்வுண்மையைச் சொல்லுகிறோம் நீர் ஏற்றுக்கொள்ளும்; சோற்றையும் நீர் ஏற்றுக்கொள்ளும். அதற்கு உளர் மற்றொருவர் யாருக்குக் கிட்டும் அது சோறும் நீர் கொளும் என்பதனை மற்றொருவர் அதற்கு உளர் யாருக்குக் கிட்டும் அது சோறு நீர்கொளும் என மாற்றிப் பிறர் எவர்க்குங் கிடையாது உமக்கே கிடைக்கும் அவ்வூர்க்குட் பிச்சையையும் சோற்றையும் நீர் ஏற்றருளும் என்று மற்றொரு பொருளுங் கொள்க.
|
|
|
|