| "மந்திரம் அதனில் பஞ்ச மந்திரம் வடிவ மாகத் |
| தந்திரம் சொன்ன வாறிங் கென்னெனிற் சாற்றக் கேள்நீ |
| முந்திய தோற்றத் தாலும் மந்திர மூலத் தாலும் |
| அந்தமில் சத்தி ஆதிக்கு இசைத்தலும் ஆகும் அன்றே." |
| - சிவஞானசித்தியார், 1. 2 - 31. |
'சத்தி ஆதிக்கு' என்பது ஆதி சத்திக்கு எனப் பொருள் பயக்கும்.
இவ்வுண்மையினைத் திருவள்ளுவநாயனார் தம் செந்தமிழ்ப் பொதுமறையானுணர்க.
| "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி |
| பகவன் முதற்றே உலகு." |
| - திருக்குறள், 1. |
சமயங்கள் பலவாகத் தோன்றினமைக்குக் காரணம் விரிவிலா அறிவினார்தம் வேட்கையே அன்றிப் பிறிதின்று. இவ்வுண்மை வருமாறு காண்க:
| "விரிவிலா அறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்து |
| எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாகும் |
| பரிவினாற் பெரியோ ரேத்தும் பெருவேளூர் பற்றி னானை |
| மருவிநான் வாழ்த்தி யுய்யும் வகையது நினைக்கின் றேனே." |
| - 4. 60 - 9. |
சமயங்களின் மெய்ம்மை யுணராதார்க்கு வரும் எடுத்துக்காட்டு. "பிறவிக் குருடர் பலர் குழீஇக்கொண்டு வேழங்காண்டல் விருப்பான் அது நின்றுழிச் சென்று, கையினால் ஒவ்வோருறுப்பினைத் தைவந்து வேழமாவது முறம்போல்வதென்றும், உரல்போல்வதென்றும், உலக்கை போல்வதென்றும், மலைபோல்வதென்றும் தம்முண் மாறுகொண்டு ஒருவரை யொருவர் மறுத்துக் கலாம் விளைத்தல்போலச் சித்தாந்த சைவ நெறி நின்று ஆசான் திருவருள் பெறாதார் தத்தம் உணர்விற் கேற்பச் சமய நூல்களில் ஒவ்வொன்றனை ஆராய்ந்து அவற்றிற் கூறும் ஏகதேசப் பொருள்களே பற்றிக்கூறி, ஒருவரை யொருவர் மறுத்துத் தம்முண் மாறுகொண்டு கலாம் விளைத்தல். அங்ஙனம் கலாய்க்கின்றுழிக் கண்ணுடையா னொருவன் நோக்கி, இவர் செவி முதலிய ஓரோறுப்புகளே பற்றிக் கூறிக் கலாம் விளைக்கின்றாரெனவும், வேழத்தினியல்பு வேறெனவும்" மாதவச் சிவஞான முனிவரனார் பேருரைக்கண் (சிவஞானபோத அவையடக்கம்) அருளினர். இவ்வுண்மை வரும் தனித்தமிழாகமத் திருமந்திரத்தானுணர்க:
| "முதலொன்றா மானை முதுகுடன் வாலும் |
| திதமுறு கொம்பு செவிதுதிக் கைகால் |
| மதியுடன் அந்தகர் வகைவகை பார்த்தே |
| அதுகூற லொக்கும் ஆறு சமயமே." |
| - 10. 1507. |