"அத்துவிதம்" - புணர்ப்பு. "ஒரு பொருளே அவயவ அவயவிகளாயாதல், குணகுணிகளாயாதல், வேற்றுமைப்பட்டு இரண்டாய் நிற்றற் கேதுவாகிய தாதான்மியமும், அதுபோல இருபொருளே அதுவதுவாய் ஒற்றுமைப்பட் டொன்றாய் நிற்றற் கேதுவாகிய தாதான்மியமு மெனத் தாதான்மிய சம்பந்தம் இருவகைப்படும். அவற்றுள், முன்னையது தாதாமியமென்றும், பின்னையது அத்துவிதமென்றும் வழங்கப்படும்." -சிவஞானமுனிவரனார், 6. 2. பேருரை, தாதான்மியம் - அதுதானாதல்.
'அத்துவிதம்': சிவபெருமான் தன்னின் வேறல்லாத அறிவாற்றலாகிய சிற்சத்தியுடன் யாண்டும் பிரிப்பின்றிப் பின்னிப் புணர்ந்து நிற்றல். இவ்வுண்மை வரும் தனித்தமிழ் முழுமுதல் நூலாம் சிவஞான போதத் திருமாமறையானுணர்க.
| "அருளுண்டாம் ஈசற் கதுசத்தி யன்றே |
| அருளும் அவனன்றி யில்லை-அருளின் |
| றவனன்றே யில்லை அருட்கண்ணார் கண்ணுக் |
| கிரவிபோல் நிற்கும்அரன் ஏய்ந்து." |
| - சிவஞானபோதம், 5, 2, 3. |
மேலும் வரும் சிவஞானசித்தியார்த் திருப்பாட்டுங் காண்க:
| "அருளது சத்தி யாகும் அரன்றனக் கருளை இன்றித் |
| தெருள்சிவம் இல்லை அந்தச் சிவம்இன்றிச் சத்தி யில்லை |
| மருளினை அருளால் வாட்டி மன்னுயிர்க் களிப்பன் கண்கட் |
| கிருளினை ஒளியால் ஓட்டும் இரவியைப் போல ஈசன்.' |
| - சிவஞானசித்தியார், 5. 2 - 7 |
இவ்வத்துவிதம் செவ்வி வாய்ந்த ஆவிகளை உய்யக்கொள்ளும் பொருட்டு எழுந்தருளும் சிவகுரவன் எனக் கூறுதலுமொன்று. அவ்வுண்மை வருமாறு காண்க:
| "கற்றா மனமெனக் கதறியும் பதறியும் |
| மற்றோர் தெய்வம் கனவினு நினையா |
| தருபரத் தொருவன் அவனியில் வந்து |
| குருபரன் ஆகி அருளிய பெருமையை." |
| - 8. போற்றித்திருவகவல், 73 - 76. |
"சொற்பிரகாசத்தனி" (சொப்ரகாசத்தனி) என்றது சிவபெருமான் நேர் நிலைக்கள இருக்கையாகக் கொண்டு திருக்குறிப்பால், எண்ணத்தால், ஊக்கத்தால் இயைந்தியக்கும் வடிவங்களில் மந்திரவடிவம் முற்பட்டதும் முதன்மையானதும் ஆகும். இவ்வுண்மை வருமாறு காண்க: