(பொ - ள்) "ஆங்கார . . . என்னும்" - அகங்காரமாகிய செருக்கென்னும் கொடுங்குல வேடரை யொத்த கொடிய பேய் வலிமைமிக்க ஆணவத்தினும் மிகுந்த வலிமையுடையது. (அது) அடியேனுடைய அறிவினை மயக்கிடும்; நடுவுநிலைமை இன்னதென அறிய வொட்டாது; யாதொரு பொருளைப்பற்றினும் அப் பொருள் தானாக நின்று (கருதவும் கேட்கவும்) பொறுக்கவொண்ணாத மொழிகளையே வரம்பின்றிப் பேசும்; அயன், அரி, அரன் என்னும் முத்தேவர்களும் (சில வேளை) எனக்கு ஒப்பாவாரென இயம்பும்.
"தடையற்ற . . . குருவே" - எவ்வகைத் தடையு மின்றி யாண்டும் அசைந்துருண்டு செல்லும் தேரின்கண் காணப்படும் அஞ்சுரு ஆணியொத்து (மற்றவற்றை யசைவித்து)த் தான் அசையாது நிற்கும்; இவ்வுலகின்கண் எனக்கு ஒப்பாவார் எவரென வெளிப்படுத்தல் செய்து, பேரிருளே பேருடல் வடிவமாகி எளியேனது உள்ளமெங்கணும், தன்னாட்சி நாடாகத் (தானினைத்தவாறு) தனியரசு செலுத்தி நிற்கும்; (இத்தகைய பொல்லாத செருக்கினுடன்) எப்பொழுதும் விலங்கி நில்லாமல் அடிமை போராடி வெல்ல முடியுமோ? பேச்சற்ற அருமறையருளிச் செய்த பெருங்குருவே!
"மந்த்ர . . . குருவே"
(வி - ம்) ஆங்காரம் - செருக்கு; தன்முனைப்பு. குலவேடர் - சார்பினால் நீங்காக் கொடுமையே தலைநிற்குந்தன்மையர். பாழ்த்த - வலிமை மிக்க. தொடினும் - பற்றினும், தாங்காது - மனம்பொறுக்காது. சமானம் - ஒப்பு. அஞ்சுருவாணி - அச்சுருவாணி, இது மெலிந்து நின்றது. வாங்கா - நீங்கி. வாங்கல் - விலகிப்போதல். (தோணிவாங்கில் கிடக்கிறது என்னும் வழக்காலுணரலாம்.)
ஆங்காரத்தின் தன்மை வருமாறுணர்க :
| "ஆங்காரம் புத்தி யின்கண் உதித்தகந் தைக்கு வித்தாய் |
| ஈங்கார்தான் என்னோ டொப்பார் என்றியா னென்ன தென்றே |
| நீங்காதே நிற்குந் தானும் மூன்றதாய் நிகழு மென்பர் |
| பாங்கார்பூ தாதி வைகா நிகந்தைச தந்தான் என்றே." |
| - சிவஞானசித்தியார், 2. 3 - 9. |
| "ஒரு பொருளுங் காட்டா திருளுருவங் காட்டும் |
| இருபொருளுங் காட்டா திது." |
| - திருவருட் பயன். 23 |
அகங்காரம் ஆங்காரம் என மரீஇற்று. இராவணம் - இருளின் நிறம். ஆகாரம் - உடல்.
(9)
1. | 'உருவுகண்.' திருக்குறள், 667. |