பற்றுவெகு விதமாகி யொன்றைவிட் டொன்றனைப் | பற்றியுழல் கிருமிபோலப் | பாழ்ஞ்சிந்தை பெற்றநான் வெளியாக நின்னருள் | பகர்ந்துமறி யேன்துவிதமோ | சிற்றறிவ தன்றியும் எவரேனும் ஒருமொழி | திடுக்கென் றுரைத்தபோது | சிந்தைசெவி யாகவே பறையறைய வுதரவெந் | தீநெஞ்சம் அளவளாவ | உற்றுணர உணர்வற்றுன் மத்தவெறி யினர்போல | உளறுவேன் முத்திமார்க்கம் | உணர்வதெப் படியின்ப துன்பஞ் சமானமாய் | உறுவதெப் படியாயினும் | மற்றெனக் கையநீ சொன்னவொரு வார்த்தையினை | மலையிலக் கெனநம்பினேன் | மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன் | மரபில்வரு மௌனகுருவே. |