"அற்புத . . . கடவுளே" - வியத்தகு பெருமானே, எவராலும் அறியப்படாதவனே, விடுதலை விழையும் மெய்யன்பர்கட்கு இன்பநிறைவான, புணர்ப்பெனப்படும் அத்துவித நிலையாகிய உண்மையினை உடையவனே, உண்மைவடிவினது, கண்கூடான இன்பநுகர்வுப் பொருளே, மறைவும், வாய்மையாகக் கண்டுணரும்படி (அன்பறிவு ஆற்றல்களாகிய) மூன்று திருக்கண்களுடன், கல்லாலின் நீழலில் எழுந்தருளியிருந்த மெய்யுணர்வுச் சிவகுரவனே, நினைத்தற்கரிய சிற்றம்பலத்தின்கண் இன்பப்பெருங்கூத் தியற்றியருளுகின்ற அருட்டோற்றத்திற்கு நிலைக்களமாயுள்ள பேரருட் பெருங்கடற் கடவுளே.
"கருதரிய . . . கடவுளே" -
(வி - ம்) கடவுளின் பேரியல்புகளை விளக்கியருளும் திருமாமறைகள் வருமாறு :
| "இப்படியன் இந்நிறத்தின் இவ்வண்ணத்தன் இவனிறைவன் |
| என்றெழுதிக் காட்டொணாதே." |
| (6. 97 - 10) |
| "பெண்ணமருஞ் சடைமுடியார் பேரொன் றில்லார், பிறப்பிலார் |
| இறப்பிலார் பிணியொன் றில்லார்." |
| (6. 10 - 8) |
| "ஏரொளியை யிருநிலனும் விசும்பும் விண்ணு மேழுலகும் கடந் |
| தப்பால் நின்ற, பேரொளியை" |
| (6. 1 - 10.) |
| "தானலா தண்டத் துலகமில்லை" |
| (4. 40 - 1) |
| "நேரிழையைக்கலந் திருந்தேபுலன்களைந்தும் வென்றானை" |
| (6. 50 -3) |
| "தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச் |
| சங்கரா யார்கொலோ சதுரர் |
| அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன் |
| யாதுநீ பெற்றதொன் றென்பால்" |
| - 8. கோயிற்றிருப்பதிகம், 10 |
| "அருவமு முருவமும் ஆனாய் போற்றி" |
| - 8. போற்றித்திருவகவல், 193. |
| "உற்றாரென் றொருவரையு மில்லா தானே" |
| (6. 10 - 8). |
| "பொற்றூண்காண் மாமணிநற் குன்றொப் பான்காண் |
| பொய்யாத பொழிலேழுந் தாங்கிநின்ற கற்றூண்காண்" |
| - 6. 8 - 1. |
| "தன்னியல்பால் மற்றொருவ ரில்லான் கண்டாய்" |
| (6. 39 - 8) |
| "ஈறிலாதவன் ஈசனொருவனே" |
| (5. 100 - 3.) |
| "பாரிலங்கு புனலனல்கால் பரமா காசம் |
| பருதிமதி சுருதியுமாய்ப் பரந்தார் போலும்" |
| (6. 75 - 7) |