மடலவிழு மலரனைய கைவிரித் துக்கூப்பி | வானேயவ் வானிலின்ப | மழையே மழைத்தாரை வெள்ளமே நீடூழி | வாழியென வாழ்த்தியேத்துங் | கடல்மடை திறந்தனைய அன்பரன் புக்கெளியை | கன்னெஞ்ச னுக்கெளியையோ | கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு | கருணா கரக்கடவுளே. |
(பொ - ள்) "உடல்குழைய . . . குதித்துப்" - (ஒழிவிலா விழுமிய நற்றவம் புரிதலால்) உடல் செவ்வியுற்று மெலியவும், (அது வாயிலாக) எலும்புகள் நெகிழ்ந்து உருகவும், (பேரன்புப் பெருக்கால்) இருகண்களினின்றும் இன்பக்கண்ணீர் ஊற்றுக்கண் திறந்தாலொத்துப் பெருக்கெடுத்துப் பொழிந்து வழிய, இரும்பாலாகிய ஊசி காந்தத்தின் முன்னிலையில் (அக் காந்தத்தின் அசைவித்தலும், நகர்வித்தலுமாகிய பேராற்றலால்) அசைவுற்று அதனை அண்மி நீங்காது பொருந்தி உறைவது போன்று, ஒப்பிலாத நின் திருவடியுறவினை (இன்பமேலீட்டால்) மறவாது நினைந்து நினைந்து (அது காரணமாக) மனம் படபடெனத் துடித்து மிகப் பதைத்து உள்ளே நடுக்கமெய்தவும் (அதனால் தன்வயமிழத்தலாகிய மெய்ம்மறப் பெய்திப்) பாடுதலும் ஆடுதலும் துள்ளுதலும் செய்து;
"பனிமதி . . . கூப்பி" - திங்களையொத்த பொங்குங் குளிர்ச்சிமிக்க முகத்தின்கண்ணே, நிலவனைய இளநகை பரப்பி மிக்க ஆரவாரத்துடன் எழுந்து, இதழ்விரிந்த தாமரை மலரையொத்த செங்கை விரித்துப் பின் உச்சிமேல் ஏறக்குவித்து வணங்கி;
"வானே . . . எளியையோ" - (காதன் மிகுதியால்) திருவருள் அறிவுப் பெருவெளியே, அவ்வெளியின்கண் தோன்றும் தெவிட்டாப் பேரின்பே, (அடியாருணர்வின்கண் பாய்ந்து பொழியும்) அப் பேரின்பப் பெருமழையே, மழையின் நீங்கா நீள் ஒழுக்கே, அவ் வொழுக்கின் நிலையான வெள்ளமே (அடியேங்கள் வாழ்தற்பொருட்டு) நீ வாழ்வாயாகவென வாயார வாழ்த்திப் பரவுகின்ற, கடலானது திறந்த மடையின் வழியாக இடையீடின்றி வெளிப்போந்ததையொத்த அன்பர்தம் பேரன்புக்கு எளிமையாவை; (மேலே கூறிய பண்புகள் ஒரு சிறிதுமில்லாத) பாறையினும் வலிதாகிய கல்நெஞ்சம் படைத்த புல்லிய தன்மையுள்ள சிறியேனுக்கு எளிமையாகும் தன்மையோ! (ஆகாயென்பது கருத்து).
"கருதரிய . . . கடவுளே" -
(வி - ம்) குழைதல் - மெலிதல்; வாடுதல். பனி - குளிர்ச்சி. ஆர்த்து - ஆரவாரித்து. மடல் - இதழ். தாரை - ஒழுக்கு.