தவம்புரிவார் நன்பகற் பலவுடன் கழிந்த வுண்டியராதலின் என்பெழுந்தியங்கும் யாக்கையராய் மெலிந்திருப்பவர்தம் இயல்பு, "புற்றுமாய் மரமாய்" என்னுந் (திருவா. 8. செத்திலாப் பத்து, 2) மறைமுடிபான் உணர்க.
காந்தத்தின் முன்னன்றி இரும்பு வேறெதன் முன்னும் அசைவதின்று. அறிவில்லாத அவ்விரும்பு அசையுந்தன்மையுடையது ஆயினும் மற்றொன்றால் அசைவிக்கப்பட்டாலின்றித் தானாக அசையாது. அம்மட்டுமன்று, மற்றொன்றனோடு பொருந்தும் தன்மையுமுடையதன்று. ஆனால், மற்றொன்று இழுத்துப் பொருத்தினால்மட்டும் பொருந்தும். இவ்விரண்டும் காந்தத்தினால்மட்டும் இரும்பின்கண் நிகழக் காண்டும். அதுபோல் கண்ணுதற் பெருங்கடவுளால் விளக்க விளங்கும் அறிவுடைய ஆருயிர்கள், அறிந்தும், அவன்றன் திருந்தடி பொருந்தப் புணர்ந்தும் பேரின்பம் பேராது நுகர்ந்தும் வருகின்றன. இவ்வுண்மை வருமாறுணர்க:
| "விளம்பிய வுள்ளத்து மெய்வாய் கண்மூக் |
| களந்தறிந் தறியா ஆங்கவை போலத் |
| தாந்தம் உணர்வின் தமியருள் |
| காந்தம் கண்ட பசாசத்1 தவையே." |
| - சிவஞானபோதம், நூற்பா - 5. |
பசாசம் - இரும்பு.
காப்பாற்றப்படுவோர் காப்பாற்றுவாரைக் கைகூப்பி வாழ்த்துதல் தம்பொருட்டேயாம். அதுபோல் எல்லாம்வல்ல இறைவனை ஆருயிர்கள் வாழ்த்துவதும் தங்கள்பொருட்டேயாம். "வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்" என்னும் திருமாமறையா னுணர்க:
"நமச்சிவாய வாழ்க" வென்பதும் இப்பொருட்டேயாம்.
"வாழ்வோர் வாழவவன் றாள்வா ழியவே." - புறம். 171.
பல்லாண்டு கூறுவது வாழ்த்தின் பண்பு. வருமாறுணர்க :
| "மிண்டும னத்தவர் போமின்கள் மெய்யடி |
| யார்கள் விரைந்து வம்மின் |
| கொண்டுங் கொடுத்தும் குடிகுடி ஈசற்காட |
| செய்ம்மின் குழாம் புகுந்து |
| அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர் |
| ஆனந்த வெள்ளப் பொருள் |
| பண்டும் இன்றும் என்றும்உள்ள பொருளென்றே |
| பல்லாண்டு கூறுதுமே. |
| - 1. திருப்பல்லாண்டு, 2. |
அன்போடுருகி அகங்குழைவார்க்கே ஆண்டவன் வேண்டும் அருள்புரிவன் என்னும் உண்மையினை வருமாறுணர்க :
1. | 'இரும்பைக்காந்.' சிவஞானசித்தியார், 11. 2 - 5. |