ஓருயிரினை அது நின்ற உடம்பினின்று நீக்குவதாகிய) கொலையினைக் கருதார்;
"சங்கற்ப . . . . . . உதவுவாய்" - (இத்தகைய மேலான கொள்கைகளை) உயிர்க்கொள்கையாகக் கொண்டொழுகும் உரனுடை உள்ளத்தராம் சித்தர்களுடைய உள்ளக்குறிப்பின்கண் எழுந்தருளியிருந்து நீங்காச் சான்றாய், இம்மை, மறுமை இரண்டிலும் (தெய்வத் தருக்கள் என்று சொல்லப்படும்) சந்தானம், கற்பகம் போல நின்று எல்லா வகையான இன்பங்கள் முற்றும் உதவியருள்வாய்;
"சிங்கத்தை . . . . . . கப்பலே" - அரிமாவினை யொத்து அடியேனைக் கொன்று தின்னவரும் வினைகளை (அவ்வரிமாவினை அடக்கும் பேராற்றல் வாய்ந்த) எண்காற் பறவையாகிய சிம்புளாய் நின்று கிழித்தெறிய வருபவனே, உள்ளத்துறு கவலையாகிய பேரிருளினை நீக்கித் திருவருள் ஒளி பெருக்குத் தெய்வ மூதறிவுச் சுடரே, எளியேனாகிய யான் (பிறவிப் பெருங்கடல் நீந்திக்) கரையேறவே எல்லையில்லாத பெருவேட்கையாகிய பெருவெள்ளத்தின்கண் உலா வருகின்ற அருள் வெளியாம் வட்டத்தில் ஓடியுலாவும் நாவாய் போன்றவனே!
"கருதரிய . . . கடவுளே" -
(வி - ம்) அற்றபடி - முடிந்தபடி. சங்கற்பம் - கொள்கை. சித்தர் - உள்ளத்து உரனுடையர். சாட்சி - சான்று; கரி. சமத்தம் - எல்லாம். சேதிக்க - அறுக்க; நீக்க. சிம்புள் - சரபம். தீனனேன் - எளியேன். ககனம் - வெளி. கப்பல் - நாவாய்; மரக்கலம்.
தேவ வுலகத்து மரங்கள் ஐந்து: 1. அரிச்சந்தானம், 2. கற்பகத்தரு, 3. சந்தானம், 4. பாரிசாதம், 5. மந்தாரம்.
| "சந்தானம் தேவ தாரங் கற்பகம் |
| மந்தாரம் பாரிசாத மைந்தரு வருக்கம்." |
| - பிங்கலம், 2650. |
சிம்புள் உண்மை வருமாறு :
| "சிம்புள் வாருண்டம் அம்பர வாணம் |
| சம்பரம் வருடை துரோணஞ் சரபம் |
| எண்காற் பறவைக் கெய்தும் பெயரே." |
| - 2327. |
சான்றோர் தன்மை வருமாறு :
| "நகையீகை இன்சொல் இகழாமை நான்கும் |
| வகையென்ப வாய்மைக் குடிக்கு." |
| - திருக்குறள், 153. |
| "உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் |
| உள்ளத்து ளெல்லாம் உளன்." |
| - திருக்குறள், 294. |
| "தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி |
| தின்னுயிர் நீக்கும் வினை." |
| - திருக்குறள், 327. |