உயிர்ப்பும் உடனுறையவில்லையோ? அங்ஙனம் இருப்பவும், யாரோ ஒருவன் உன்னை அறிவுடையவனென்றும், எங்களை மட்டும் அறிவில்லாத பொருள்கள் என்றும் (மெய்ம்மை உணராதபடியால்) கூறினான்; கூறிப் பிரித்தும் வைத்தான்.
"அதைக் . . . ஏச" - அங்ஙனஞ் சொல்லக் கேட்ட அந்நாள் முதலாக இந்நாள் வரையும் முறைகேடாக எங்களை அடக்குதல் செய்து, குறுக்கிட்டு நெருங்கி வல்லாட்சி செய்து வருகின்றாய்; (அங்ஙனம் செய்து வருகின்ற நீ) எங்கள் முன்னே கிடைத்தற்கரிய பேறாகிய செல்வமெனப்படும் கோட்டை எதனைக் கொண்டாய் நீ என்று அறிவில்லாத மூடமனம் மிகவும் பழித்தலால்;
"முண்டெரியு . . . சொலாய்" - (அப் பழிப்பினைக் கேட்டதும்) பெருகி எரியும் தீயின்கண் இட்ட மெழுகு என்று சொல்லும்படி நெஞ்சங்கருகி அடியேன் நைதல் முறைமையாகுமோ? திருவடிக்கு முறையிட்டுப் பதினாயிரம் முறை விண்ணப்பித்துக் கொண்டாலும் நின்திருவருள் (எளியேன் புன்மொழிகளைத் திருச்செவி ஏற்று) இரங்குதல் செய்தருளக் காண்கிலம்; இனிமேல் பேரின்பப் பெருநிலை எளியேனுக்கு வந்து கைகூடுவது எவ்வாறோ? திருவாய் மலர்ந்தருள் வாயாக.
"சுத்தநிர்க் . . . .சுகவாரியே" -
(வி - ம்.) பிராணன் - உயிர்மூச்சு. சித்து - அறிவு. அநியாயம் -முறையின்மை. அடர்த்தல் - நெருக்குதல். கோட்டை - பேறு. மூடம் - அறியாமை. சடம் - அறிவில்லது. கருக - வருந்த. சுகம் - இன்பம்.
முப்பொருளாகிய இறை, உயிர், சிறை என்பன தொன்மையிலுள்ளன. இறை ஏதுந் துணை வேண்டாது தானே விளங்கும் பேரறிவுடையது. உயிர் விளக்க விளங்கும் சிற்றறிவு உடையது. மலம் மாயை கன்மங்களாகிய மூன்றும் அறிவில்லன. மாயா கருவிகள் இறைதிருவருளால் உயிருடன் பொருத்தப்பட்ட காலத்து அவ்வுயிரின் அன்பறிவாற்றல்கள் தொழிற்படத் துணையாகும். அங்ஙனம் துணையாக நிற்பினும் அறிவுடையன ஆகா. கை எழுதுகோலைக் கொண்டு எழுதும்; எழுதுகோலின்றி எழுதா; எழுதுகோலும் கையின்றிப் பயன்படாது. எனினும் கைக்கு உள்ளதாகிய ஊற்றுணர்ச்சி எழுதுகோலுக்கு என்றும் இன்று. இதுபோல் மாயா கருவிகள் உயிரோடு கூடியவிடத்துப் பயன்படும். உயிரோடு கூடியவிடத்துக் கீழுள்ள கருவிகளை நோக்க மேலுள்ள கருவிகள் அறிவுள்ளனபோற் காணப்படும். அது தீச்சேர்ந்த பொருளில் தீத்தன்மையாகிய வெப்பங் காணப்படுவதோடொக்கும். இவ்வுண்மை வருமாறுணர்க :
| "மருவிய பொறியி லொன்றும் மாபூதம் ஐந்தி லொன்றும் |
| கருவிகள் நான்கும் நீங்காக் கலாதிகள் ஐந்துங் கூடி |
| ஒருபுலன் நுகரும் இந்த ஒழுங்கொழிந் துயிரும் ஒன்றைத் |
| தெரிவுறா தவனொ ழிந்தத் திரள்களும் செயலி லாவே." |
| சிவப்பிரகாசம், 93. |
-