பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

2

     மனவாக்கினில் . . . நின்றதெது - மனத்தால் நினைத்தற்கும், வாயால் உரைத்தற்கும் எட்டாமல் நிலைபெற்றுள்ளது எந்தப் பொருள்;

     சமயகோடி . . . நின்றதெது - பல்வேறு சமயங்களும் தம்முடைய தெய்வமென்று, எவ்விடங்களிலும் விடாது பற்றி நேர் நின்று வழக்குரைக்கவும், அவரவர் தெய்வமாக நின்றது எந்தப் பொருள்.

     எங்கணும் . . . முள்ளதெது - இம்முறையாக எவ்விடத்தும், முடிவு பெறாத பெரிய வழக்காகி, எத்தொழிலும் வல்ல ஒப்பற்ற (தானே விளங்கும்) பேரறிவாகி, பேரின்பப் பெருவடிவாய், எக்காலத்தும் டொன்றா இயல்பாயிருப்பது எந்தப் பொருள்;

     மேல் கங்குல்பக . . . கருத்திற் கிசைந்ததுவே - பின்னும், இரவு பகல் அல்லாது நின்ற ஓரிடத்தினை வாய்ந்தது எந்தப் பொருள்; யாவருடைய கருத்திற்கும் ஒத்தது அப்பெரும் பொருள்;

     கண்டனவெலா . . . அஞ்சலி செய்குவாம் - ஆதலால் அப்பெரும் பொருளே, காணப்பட்ட பூதங்களும், பூதத் தொடர்புகளாகவும், மௌன வடிவமான வெளியீடாகவும் உள்கி (தியானித்து) (யாம்) கைகூப்பி வணங்குவாம்.

     (விளக்கம்) "பலகலை ஆகமவேதம் யாவையினும் கருத்துப் பதி பசு பாசந் தெரித்தல்" (சிவப்பிரகாசம்) இந் நூலின்கண் அவ்வுண்மை குறிப்பித்தருள்வார்போன்று, இது முதல் மூன்று திருப்பாட்டுகள் "திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்" ஓதுகின்றன. திருவருளென்றது தடையிலா மூதறிவு (சிவஞானம்)ப் பொருளான, வடிவங்கொள்ளாத அறிவாற்றலை. பரசிவமென்றது, இன்ப நிலையமான வடிவங்கொள்ளாத சிவத்தினை. ஆகம வேதங்களின் கருத்திற்கு அப்பாலாய் உயிர்க்கு உயிராய் உயிர்கட்கெல்லாம் அறிவை விளக்குவிக்கும் சிவசக்திவடிவராய அம்மையப்பர் வணக்கம் கூறியதாயிற்று. எல்லாம் வல்ல விழுமிய முழு முதல்வனை அம்மையப்பராக ஓதும் உண்மை வரும் செந்தமிழ்த் திருமாமறை திருமாமுறைத் திருப்பாட்டுகளான் உணர்க:

"அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
    அன்பினில் விளைந்தஆ ரமுதே
 பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
    புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
 செம்மையே யாய சிவபதம் அளித்த
    செல்வமே சிவபெரு மானே
 இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே."
- 8. பிடித்த - 3
"அம்மையப்ப ரேஉலகுக் கம்மையப்பர் என்றறிக
 அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் - அம்மையப்பர்
 எல்லா உலகிற்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
 அல்லார்போல் நிற்பர் அவர்."
- திருக்களிற்றுப்படியார் - 1.