"ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய்" (4. 65 - 1) எனவும், "அப்பனீ அம்மைநீ" - (6) எனவும், "பெண்ணினல் லாளொடும் பெருந்தகை" (3. 24. 1.) எனவும் ஓதியருள்வனவும் காண்க.
தன்னியல்பில் எல்லாங் கடந்தவராகத் திகழும் சிவபெருமானின் இயல்பு, வரும் தனித் தமிழாகமத் திருப்பாட்டா னுணரலாம்.
| "சிவன் அரு உருவும் அல்லன் சித்தினோ டசித்து மல்லன் |
| பவமுதல் தொழில்கள் ஒன்றும் பண்ணிடு வானு மல்லன் |
| தவமுத லியோக போகந் தரிப்பவன் அல்லன் தானே |
| இவைபெற இயைந்தும் ஒன்றும் இயைந்திடா இயல்பி னானே." |
| - சிவஞானசித்தியார், 1. 3 - 11. |
மேலும் சிவபெருமானுக்கு அருவம், அருவுருவம், உருவம், அப்பால் நிலை என்னும் நான்கனுள் அருவ இலக்கணம் இம்மூன்று திருப்பாட்டுகளானும் ஓதுகின்றனர்.
சிவபெருமான் எண்பேர் திருவுருவங்களைக் கொண்டருள்வன் என்னும் வாய்மை புலனாக "அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய்" என்றருளினர்.
இவ்வுண்மை வரும் செந்தமிழ்த் திருமாமறைகளான் உணர்க:
| "நிலம்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் |
| புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான் |
| உலகே ழெனத்திசை பத்தெனத்தான் ஒருவனுமே |
| பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ." |
| உயிர் - காற்று. - 8: திருத்தோணோக்கம் - 5. |
மேலும் "இருநிலனாய்த் தீயாகி" (6. 94 - 1) என்பதுங் காண்க. இப்பெருஞ் சிறப்பு நிலை "சிவனெனு நாமந் தனக்கே யுடைய செம் மேனி எம்மான்" ஒருவனுக்கே யுளதாம் மெய்ம்மை வரும் மணிமேகலை யடிகளான் உணர்க:
| "இடையே யிப்போ தியன்றுள அளவைகள் |
| என்றவன் றன்னைவிட் டிறைவன் ஈசனென |
| நின்ற சைவ வாதிநேர் படுதலும் |
| பரசுநின் தெய்வ மெப்படித் தென்ன |
| இருசுட ரோடிய மானனைம் பூதமென் |
| றெட்டு வகையு முயிரும்யாக் கையுமாய்க் |
| கட்டிநிற் போனும் கலையுருவி னோனும் |
| படைத்துவிளை யாடும் பண்பி னோனும் |
| துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும் |
| தன்னில் வேறு தானொன் றிலோனும் |
| அன்னோ னிறைவன் ஆகுமென் றுரைத்தனன்" |
| - மணிமேகலை, 27, சமயக். அடி. 85 - 95. |