பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

4

     இறைவன் எல்லாமாய் நிற்கும் நிலை வருமாறு:

"உலகினை இறந்து நின்ற தரனுரு என்ப தோரார்
 உலகவன் உருவில் தோன்றி ஒடுங்கிடும் என்றும் ஓரார்
 உலகினுக் குயிரும் ஆகி உலகுமாய் நின்ற தோரார்
 உலகினில் ஒருவன் என்பர் உருவினை உணரா ரெல்லாம்."
- சிவஞானசித்தியார், 1. 2 - 20.
     எங்குமாய் நிற்கும் இறைவன் இயல்பினை வருந் தனித் தமிழாகமத் திருமாமறையானுமுணர்க:

"இணங்கிநின் றான்எங்கு மாகிநின் றானும்
 பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
 உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
 வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே."
- 10. திருமந்திரம், கடவுள்,
உலகிடைக் காணும் எல்லா ஒளிகளுக்கும் ஒளி கொடுத்துக்கொண்டிருக்கும் அளவில்லாத அழிவில்லாத திருவருட் பேரொளி சிவபெருமான்றன் திரு ஒளியே என்னும் உண்மையினை வருமாறு காண்க:

"நாயகன் கண்ந யப்பால் நாயகி புதைப்ப எங்கும்
 பாயிருள் ஆகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றித்
 நூய நேத் திரத்தினாலே சுடரொளி கொடுத்த பண்பின்
 தேயமார் ஒளிகள் எல்லாஞ் சிவனுருத் தேச தென்னார்."
- சிவஞானசித்தியார், 1. 2 - 24.
மேலும் இவ்வுண்மை "நலமலி மங்கை நங்கை" (4. 14 - 8) என்னுந் தனித்தமிழ்த் திருமாமறையானுமுணர்க. அறுசமயப் பாகுபாடுகள் வருமாறு:

     1. புறப்புறச் சமயம்: உலகாயதம், நால்வகைப் பௌத்தம். ஆருகதம் என ஆறு.

     2. புறச்சமயம்: தருக்கம், மீமாஞ்சை, ஏகான்ம வாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என ஆறு.

     3. அகப்புறச்சமயம்: சைவம், பாசுபதம், மாவிரதம், காளா முகம், வாமம், வைரவம் என ஆறு.

     4. அகச்சமயம்: பாடாணவாதசைவம், சங்கிராந்தவாசைவம், அவிகாரவாதசைவம், பரிணாமவாதசைவம், சுத்தசைவம், பேதவாதசைவம் என ஆறு. இவற்றின் கொள்கைகளும், அவை பொருந்தாமையும், அவ்வனைத்தும் சித்தாந்த சைவத்திற்குப் படிமுறையாக நிற்கும் உண்மையும் "சிவஞானசித்தியார் பரபக்கத்தினும்" "சங்கற்ப நிராகரணத்" தினும் விளக்கமாகக் காண்க.