பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

487

விடுத்த வாறுங்கண் ணீரொடு கம்பலை
    விலகு மாறுமென் வேட்கைப்ர வாகத்தைத்
தடுத்த வாறும் புகலாய் சிரகிரித்
    தாயுமான தயாபர மூர்த்தியே.
     (பொ - ள்.) (திருச்சிராப்பள்ளித் திருவூரின்கண் வீற்றிருந்தருளும்) தாயுமானத் தண்ணளிச் செல்வரே! மோன குருவாய்த் தேவரீர் எழுந்தருளி வந்து உண்மையுணர்த்தி நன்னெறி கொடுத்தபோது அடியேன் பெற்றுள்ள இரவல் உடம்பும், பொருளும், ஆவியும் ஆகிய மூன்றும் நின்பால் ஒப்புவித்தனவல்லவோ? பின்னும் நானென்று உரிமையும் முதன்மையுங் கொண்டு குளறிக் கூத்தாடுமாறு மயக்கும் வகை மாயையை விடுத்தவண்ணமும் அடங்காக் கண்ணீரும், ஒடுங்கா நடுக்கமும் நீக்கிய வண்ணமும், அடியேனின் வேட்கை வெள்ளத்தினைத் தடுத்த வண்ணமும் திருவாய்மலர்ந்தருள்வாயாக.

(1)
நோயும் வெங்கலிப் பேயுந் தொடரநின்
    நூலிற் சொன்ன முறைஇய மாதிநான்
தோயும் வண்ணம் எனைக்காக்குங் காவலுந்
    தொழும்பு கொள்ளுஞ் சுவாமியு நீகண்டாய்
ஓயுஞ் சன்மன் இனியஞ்சல் அஞ்சலென்
    றுலகங்கண்டு தொழவோர் உருவிலே
தாயுந் தந்தையும் ஆனோய் சிரகிரித்
    தாயு மான தயாபர மூர்த்தியே.
     (பொ - ள்.) பொறுக்க முடியாத உடல் நோயும், நீங்கா வறுமைப்பேயும் அடியேனை நீங்கா நிழல்போல் பின்தொடர நின்னருளால் வெளிப்போந்த திருமுறையின்படி செய்கடன்களை எளியேன் செய்யும் படி எளியேனைக் காத்தருளும் காவலும் அருளுடன் கூவிப் பணி கொள்ளும் தெய்வமும் நீயே யாவாய். இனிப் பிறப்பு அகலும், அஞ்சற்க அஞ்சற்க என்று உலகனைத்துங் கண்டு தொழும்படி ஓருருவிற்றானே தாயுந் தந்தையுமாய்த் தோன்றியருள்பவனே! திருச்சிராப்பள்ளித் தாயுமான தண்ணளிக் கடவுளே!

(2)
முகமெ லாங்கணீர் முத்தரும் பிடச்செங்கை முகிழ்ப்ப
அகமெ லாங்குழைந் தானந்த மாகநல் லறிஞர்
இகமெ லாந்தவம் இழைக்கின்றார் என்செய்கோ ஏழை
சகமெ லாம்பெற நல்லருள் உதரமாச் சமைந்தோய்.
     (பொ - ள்.) திருவருளால் திருவடியுணர்வு கைவரப்பெற்ற நல்லார் முகமுழுவதும் இன்பக்கண்ணீர் முத்தரும்பவும், செங்கைகள் உச்சி