பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

504

மாலையெனப்படும் வாகை என நறுமண மலர்மாலை சூடி வானத்தையளாவி நிமிர்ந்து செல்லும் மேகங்கள் (நின்கூந்தலுக்குத் தோற்றமையால்) மலையேறி (நாணத்தால்) மறைந்து போகும்படி வெருட்டுதல் செய்த கரிய கூந்தலையுடைய தெய்வத்திருமகளே, வாட்படை போன்ற நீண்ட கண்களையுடையாளே, ஆனேறெனப்படும் விடையினை ஊர்ந்து செல்லும் எம்பெருமானாம் சிவன் திருவுள்ளத்திற்கு மிக்க மகிழ்ச்சி தரக்கூடிய மடமயில் போன்றவளே, மலையரையனின் இருகண் மணியாகத் தோன்றியருளிய மலைவளர் காதலிப்பெண் உமையே. தொக்கு - தோல்; தோற்பை. ஊரேறு - ஊர்ப்பன்றி.

(7)
பூதமொடு பழகிவள ரிந்திரிய மாம்பேய்கள்
    புந்திமுத லானபேய்கள்
  போராடு கோபாதி ராட்சசப் பேய்களென்
    போதத்தை யூடழித்து
வேதனை வளர்த்திடச் சதுர்வேத வஞ்சன்
    விதித்தானிவ் வல்லலெல்லாம்
  வீழும் படிக்குனது மவுனமந் த்ராதிக்ய
    வித்தையை வியந்தருள்வையோ
நாதவடி வாகிய மஹாமந்த்ர ரூபியே
    நாதாந்த வெட்டவெளியே
  நற்சமய மானபயிர் தழையவரு மேகமே
    ஞானஆ னந்தமயிலே
வாதமிடு பரசமயம் யாவுக்கும் உணர்வரிய
    மகிமைபெறு பெரியபொருளே
  வரைரா சனுக்கிருகண் மணியாம் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.
     (பொ - ள்.) ஓசையெனப்படும் நாதவடிவமாகிய மாமந்திரத் திருவுருவே! நாதத்துக்கு அப்பாற்பட்ட பேரின்பமன்றிப் பிறிது எதுவும் கலவாத அறிவுப் பெருநிலையமாம் வெட்டவெறு வெளியே, நற்சமயமெனப்படும் சைவசமயமான நல்ல பயிர் தழைக்கவரு திருவருண் மேகமே, பேரறிவும் பேரின்பமும் ஒருங்கமைந்த மெல்லிய மயில்போல்வாளே, சழக்குரைத்து வழக்கழித்து வழக்காடும் புறச் சமயத்தார் எவரும் உணர்தற்கரிய மேன்மை பொருந்திய பெரிய மெய்ப்பொருளே, மலையரையனுக்கு இருகண்மணியாகத் தோன்றி யருளிய மலைவளர் காதலிப்பெண் உமையே!

     ஐம்பூதங்களாலாகிய இவ்வுடம்பகத்துப் பத்துப் பொறிகள் எனப்படும் இந்திரியப் பேய்களும் புத்தி முதலாய பேய்களும், விடாது போர்புரியும் வெகுளி முதலாய இராக்கதப் பேய்களும் அடியேனுடைய நல்லறிவினை உள்ளழித்துத் துன்பங்கள் பெருகும்படி