சூழும் உறவுகளோ அளவில்லன, இருவினைகளின் வேறுபாட்டால் உண்டாகிய உடல்களும் அளவில்லன, அவ்வுடல்களினால் செய்யுந் தொழில்களும் அளவில்லன, எண்ணங்களும் அளவில்லன, அடைந்த பெருஞ் சிறப்புகளும் அளவில்லன, துறக்கமாகிய ஒளியுலகும், நரகமாகிய இருளுலகங்களும் அளவில்லன, நல்ல தெய்வங்களும் அளவில்லனவாகிய வேறுபாடுகள்:
திகழ்கின்ற . . . தேக்கவே - விளங்காநின்ற சமயங்களும் அளவில்லன. ஆதலால், மூதறிவாற்றலே திருமேனியாகிய வனப்பாற்றலென்னும் பராசத்தியருளால் அறிந்துகொண்டு எண்ணிறந்த கோடி மேகங்கள் மழையைப் பொழிந்ததுபோல், மெய்யடியார்கள் தம் விழிகளும், நெஞ்ச வெளிகளும் நிறையும்படி;
கருதரிய . . . துரியவடிவைப் - நினைத்தற்கு முடியாத இறவா இன்பப் பெருமழையினைப் பொழிகின்ற மேகத்தை, நம் கடவுளை, நாலாம் நிலையாகிய துரிய வடிவத்தை;
பேரனந்தம் . . . . . . வைப்பை - அளவில்லனவாகிய திருப்பெயர்களை எடுத்துக்கூறி, எண்ணிலவாகிய மறைகள் புகழும், பெரிதாகிய வாய்வாளாமை எனப்படும் மௌன வைப்பினை;
பேசரும் . . . . . பணிகுவாம் - சொல்லுதற்கரிய முடிவுபேறில்லாத நிலையும், பேரறிவும், பேரின்பமும் ஆகிய பெரும் பொருட்கிளவியாற் பேசப்படும் மெய்ப்பொருளாம் பரசிவத்தை (யாம்) வணங்குவாம்.
(வி - ம்.) ஊர், பேர், உறவு, உடல், வினை, கருத்து, சீர், துறக்கம், நரகம், தெய்வம், சமயம் ஆகிய இவற்றின் தோற்றக்கேடுகளை அறிவாற்றலாகிய திருவருளாலுணர்ந்து, பேரின்பப் பெருமழை பொழியும் முகிலும், நம் கடவுளும், நாலாம் நிலைவடிவும், முடிவிலா நிலையும், பேரறிவும் ஆகிய பெரிய பொருளைப் பணிகுவாம்.
பிறப்புப் பல என்பதும், அவை வீனைக்கீடாகத் திருவருளாணையால் வருவன என்னும் வாய்மையினையும் வருமாறுணர்க:
| "அண்டசஞ் சுவேத சங்கள் உற்பிச்சஞ் சராயு சத்தோ |
| டெண்தரு நாலெண் பத்து நான்குநூ றாயி ரத்தாய் |
| உண்டுபல் யோனி யெல்லாம் ஒழித்துமா னுடத் துதித்தல் |
| கண்டிடிற் கடலைக் கையால் நீந்தினன் காரி யங்காண்." |
| - சிவஞானசித்தியார், 2. 4 - 17. |
மேலும் திருவாசகத்தின்கண்,
| "புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிக் |
| கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் |
| வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் |
| செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் |
| எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்." |
| - திருவாசகம், சிவபுராணம், 24 - 31. |
1. | உரைசேரும். 1. 132 - 4. |