பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

7

கல் என்பது உயிர்கள் உடம்பெடுத்தற்கு முன் புலப்படாது கிடத்தற்கு இடமாயிருப்பது. அப்பர் பெருமானார் அருண்மறை "துறக்கப்படாத" எனத் தொடங்கும் (4. 114 - 7) திருமறையும், "புழுவாய்ப் பிறக்கினும்" (4. 95 - 8) எனத் தொடங்குந் திருமறையும் காண்க.

     திருவருளுணர்வால் உணரும் மெய்ம்மையினை வரும் தமிழாகமத் தானுணர்க:

"ஆசுறு திரோத மேவா தகலுமா சிவமுன் னாக
 ஓசைகொள் அதனில் நம்மேல் ஒளித்தரு ளோங்கும் மீள
 வாசியை அருளும் மாயா மற்றது பற்றா உற்றங்
 கீசனில் ஏக மாகும் இதுதிரு எழுத்தின் ஈடே."
- சிவப்பிரகாசம், 92.
     'மாயா' - யா. ஆவியைக் குறிக்கும் யாப்பு என்னும் சொல்லின் முதலெழுத்து. யாப்பு - கட்டு; பசு. இது ய எனக்குறுகி நின்றது மந்திர முறையினால். "சிவயநம" - மந்திரம். மா - பெருமை.

     இக்கருத்தே அமைந்த பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாட்டு வருமாறு:

"மாயநட் டோரையும் மாயா மலமெனும் மாதரையும்
 வீயவிட் டோட்டி வெளியே புறப்பட்டு மெய்யருளாம்
 தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயைமறந்
 தேயும தேநிட்டை யென்றா னெழிற்கச்சி யேகம்பனே."
- பட்டினத்துப்பிள்ளையார், திருவேகம்பமாலை 10. (2)
அத்துவித வத்துவைச் சொப்ரகா சத்தனியை
    அருமறைகள் முரசறையவே
  அறிவினுக் கறிவாகி ஆனந்த மயமான
    ஆதியை அநாதியேக
தத்துவ சொரூபத்தை மதசம்ம தம்பெறாச்
    சாலம்ப ரகிதமான
  சாசுவத புட்கல நிராலம்ப ஆலம்ப
    சாந்தபத வ்யோமநிலையை
நித்தநிர் மலசகித நிஷ்ப்ரபஞ் சப்பொருளை
    நிர்விஷய சுத்தமான
  நிர்விகா ரத்தைத் தடத்தமாய் நின்றொளிர்
    நிரஞ்சன நிராமயத்தைச்