பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


689


 
அமையாக் காதலிற் சமய கோடி
 
அறம்பொரு ளாதி திறம்படு நிலையில்
 
குருவா யுணர்த்தி யொருவர்போ லனைவருந்
 
தத்தம் நிலையே முத்தி முடிவென
 
30வாத தர்க்கமும் போத நூல்களும்
 
நிறைவிற் காட்டியே குறைவின்றி வயங்க
 
அங்கங்கு நின்றனை எங்கு மாகிச்
 
சமயா தீதத் தன்மை யாகி
 
இமையோர் முதலிய யாவரும் முனிவருந்
 
35தம்மைக் கொடுத்திட்டெம்மை யாளென
 
ஏசற் றிருக்க மாசற்ற ஞான
 
நலமும் காட்டினை ஞானமி லேற்கு
 
நிலையுங் காட்டுதல் நின்னருட் கடனே.
    "திருவருள்...முதலே" - திருவருள் ஞானம் பெருகித் திருவருளினைப் பொழிகின்ற சிவகுருவடிவாய்க் கோலங் கொண்டெழுந்தருளிய குரு நாதனே! ஒன்றானுங் குறைவிலாது எல்லாவற்றாலும் நிறைந்த நிறைவே, எங்கும் நிறைந்து நிற்கின்ற திருவருட் பேரொளியே, இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய நேசவடிவே, எவ்வகையானும் குறைவுதல் எய்தாத நிறைபொருளே, மாயாகாரியமாகிய முக்குணமுங் கடந்து, திருவருட் காரியமாகிய எண் குணங்களும் பொருந்திய குணப்பெருங்கடலே, (பிறப்பு இறப்புகளில்லாத பெருமான் பிறப்பு இறப்புகட்கு உட்பட்டுள்ள எளியேன் உய்யும் பொருட்டு) தேவரீர் எளியேனுக்குத் தோன்றிய அருட்பெருஞ் சோதியே, என்றும் ஒருபடித்தாயுள்ள பொருளே, அடியேனை விட்டு எக்காலத்தும் நீங்குதலில்லாத யாவற்றினுக்கும் விழுமிய முழு முதல்வனே!

    "சீர்மலி...ஆக்கையும்" - மங்கலச் சிறப்பு மிகுந்த தெய்வத் தன்மையுள்ள, திருவருளினாலே, நிலமுதலாக அண்ட விரிவுகள் முழுவதையும் முறையுறநிறுவி, முட்டையிற்றோன்றுவ முதலாகிய எழுவகைப் பிறப்புகளில் தங்கியிராது மிகுந்த எண்ணிலடங்காத பிறப்புகளில் அவ்வவ்வினத்தினையடைந்து நிறையவும், அணுவையொத்ததும் மலையை யொத்ததுமாகிய சிறிதும் பெரிதும் ஆகிய உடம்புகளும்.

    "கணமுத ... அமைத்தனை" - கணப்பொழுது முதலாகிய அளவினை வாய்ந்த கற்ப காலத்தளவும் கன்ம வேறு பாட்டின் பல பிறப்புகளில் விளைந்த பழமைக்கு ஏற்ப இமைப்பொழுதாயினும், தமக்கென்று தனித்து விளங்கும் சுதந்தர அறிவு இல்லாத அருட்செல்வம் அமையப்பெறாத ஏழைகளாகிய ஆருயிர்க் கூட்டங்கள் நல்வாழ்வுற அமைத்தருளியுள்ளனை.

    "எவ்வுட...அமைத்திடும்" - எவ்வகையான உடம்பினை எடுத்தவர்கள், அவ்வகையான உடம்புடன் கூடி வாழும் வாழ்க்கையினை