| திருவளர் கருணைச் சிவானந்த பூரணம் |
| ஒருவரும் அறியா ஒருதனிச் சித்து |
| நவந்தரு பேதமாய் நாடக நடித்துற் |
| பவந்தனை நீக்கிப் பரிந்தருள் பராபரம் |
5 | கண்ணுங் கருத்துங் கதிரொளி போல |
| நண்ணிட எனக்கு நல்கிய நன்மை |
| ஒன்றாய்ப் பலவாய் ஒப்பிலா மோனக் |
| குன்றாய் நிறைந்த குணப்பெருங் குன்றம் |
| மண்ணையும் புனலையும் வளியையும் கனலையும் |
10 | விண்ணையும் படைத்த வித்திலா வித்துப் |
| பந்த மனைத்தையும் பாழ்பட நூறிஎன் |
| சிந்தையுட் புகுந்த செழுஞ்சுடர்ச் சோதி |
| விள்ளொணா ஞானம் விளங்கிய மேலோர் |
| கொள்ளைகொண் டுண்ணக் குறைவிலா நிறைவ |
15 | தாட்டா மரைமலர்த் தாள்நினைப் பவர்க்குக் |
| காட்டா இன்பங் காட்டிய கதிநிலை |
| வாக்கான் மனத்தான் மதித்திட அரிதென |
| நோக்கா திருக்க நோக்கிய நோக்கம் |
| ஆதியாய் அறிவாய் அகண்டமாய் அகண்ட |
20 | சோதியாய் விரிந்து துலங்கிய தோற்றம் |
| பரவெளி தன்னிற் பதிந்தஎன் னுளத்தின் |
| விரவி விரவி மேற்கொள்ளும் வெள்ளம் |
| சுட்டுக் கடங்காச் சோதி யடியார் |
| மட்டுக் கடங்கும் வான்பெருங் கருணை |
25 | எல்லைக் கடங்கா ஏகப் பெருவெளி |