தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

vi

     சிவமாவதென்பது ஆருயிர் அச்சிவனுக்குச் சீரிய அடிமையாய் அவன்றன் பேரின்பத்தழுந்தி அவனையே உணர்வதாம்.

 
"கயல்மாண்ட கண்ணிதன் பங்கன்எனைக்கலந் தாண்டலுமே
 
 அயல்மாண் டருவினைச் சுற்றமும்மாண் டவனியின்மேல்
 
 மயல்மாண்டு மற்றுள்ள வாசகம்மாண் டென்னுடைய
 
 செயல்மாண்ட வாபாடித் தௌளேணங் கொட்டாமோ"
 
- 8. திருத்தௌ - 11.
     "ஆகார புவனம் - சிதம்பர ரகசியம்" என்னுந் தலைப்பின் கண், பக்கம் 275 இல் காணப்படும் "சன்மார்க்க ஞானமதின்" எனத் தொடங்கும் பாட்டினால் தில்லை மன்றமாகிய தில்லைத் திருச்சிற்றம்பலத் திருக்குறிப்பு ஓதப்பட்டுள்ளது. அதனால் தாயுமானவடிகள் தில்லைத் திருச்சிற்றம்பலச் சிறப்பினை நன்கு விளக்கியுள்ளனர். அப் பாட்டின் விளக்கத்திலும் சில குறிக்கப்பட்டுள்ளன. ஈண்டும் சில குறிக்குதும்:

     செந்தமிழ்த் திருமாமறைகள் ஓதுங்காலும் முடிக்குங்காலும் திருச்சிற்றம்பலம் ஓதிக்கொள்ளும் சீர்மை மரபாகக் காணப்படுகின்றது. அறிவுவெளி மேலும் கீழும் புடையுமாகிய எங்குமாய் நிறைந்திருப்பதும், முதல், நடு, முடிவுமாய் நிற்பதும் விளக்குவதே அவ்வுண்மையாகும். முதலும் முடிவும் திருச்சிற்றம்பலம் ஓதவே, நடுவாகவுள்ள திருப்பாட்டுகள் அத் திருச்சிற்றம்பலத்தின் விளக்கமேயாகும். அன்பின் பிழிவாம் அவ் வனைத்தும் "காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி ஓதுவார்" உள்ளத்தின்கண் திருவருளால் பதிந்து நிற்கும். எனவே அகத்துமொரு திருச்சிற்றம்பலம் அகலாது நிறைந்து நிற்கும் என்பது நன்கு புலனாம்.

     அதனால் திருச்சிற்றம்பல நிலை நான்மையாகும். இந் நான்மையும் முறையே அறிவிற் சீலம், அறிவின் நோன்பு, அறிவிற் செறிவு, அறிவில் அறிவு என்னும் படிமுறைகளை உணர்த்துவனவாகும். இவ்வுண்மை வருமாறு:

 
"ஞான நூல் தனையோதல் ஓதுவித்தல்
 
    நற்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றா
 
 ஈனமில்லாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்
 
    இறைவனடி அடைவிக்கும் எழில்ஞான பூசை
 
 ஊனமிலாக் கன்மங்கள் தபஞ்செபங்கள் தியானம்
 
    ஒன்றுக்கொன் றுயரும்இவை யூட்டுவது போகம்
 
 ஆனவையான் மேலான ஞானத்தால் அரனை
 
    அருச்சிப்பர் வீடெய்த அறிந்தோர் எல்லாம்."
 
- சிவஞான சித்தியார், 8. 2 - 13.