தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

vii

     இதன்கண் ஓதலும் ஓதுவித்தலும் அறிவிற் சீலமாகும். அறிவிற் சீலமென்பது ஞானத்திற் சரியை என்பதாம். கேட்பித்தல் அறிவில் நோன்பு. கேட்டல் அறிவில் செறிவு. சிந்தித்தல் அறிவில் அறிவாகும்.

     திருச்சிற்றம்பலம் நான்மையாம் முறையினை ஓர் ஒப்பில் வைத்துக் காட்டுதும். திருவிளக்கேற்றி அவ் விளக்கின் துணையால் அவ் விளக்கினையும் ஏனைப் பொருள்களையும் பார்க்கின்றோம். அது கொண்டே பணி புரிகின்றோம். பயன்றுய்க்கின்றோம். பின் அத் திருவிளக்கினிடத்துப் பற்றுள்ளம் வைக்கின்றோம். இந் நான்மையும் ஒப்பாகும். இதனை நினைவுகூருமாறு ஒரு வெண்பாவிற் காட்டுவதும் :

 
பார்த்தல்பணி யாற்றல் பயன்நுகர்தல் பற்றுள்ளம்
 
சீர்த்தல்ஒளி போன்றுதிருச் சிற்றம்பலம் - ஆர்த்தமறை
 
ஆதியந்தம் ஓதல் அதன்விளக்கம் நாப்பணுளம்
 
மீதிறுத்தல் கொண்டுபணி மேவு.
     திருச்சிற்றம்பலம் ஓதியே தென்றமிழ்த் திருமாமறைகள் ஓதுதல் வேண்டுமென்னும் உண்மை மரபு வருமாறு:

 
"காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
 
 கோதை குழலாட வண்டின் குழாமாடச்
 
 சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
 
 வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
 
 சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
 
 ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
 
 பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
 
 பாதத் திறம்பாடி யாடலோர் எம்பாவாய்."
 
- 8. திருவெம்பாவை, 14.
     சீதனப்புனலாடுதலால் உள்ளமும் உடலும் ஒருங்கு தூய்மை எய்தும். எய்தவே சிவபெருமான் திருவடியினைப் போற்றி மறை ஓதிப் பூத்தூவி வழிபடுதற்குத் தகுதியும் உரிமையும் உண்டாகும். உண்டாகவே அறிவு வெளியாம் திருச்சிற்றம்பலம் பாடுதல் வேண்டும். இஃதறிவு நிலையாகும். வேதப்பொருள் செறிவுநிலை. அப் பொருளாமாறு நோன்புநிலை. சோதி திறம் சீலநிலை கொன்றைத்தார் அன்பு. ஆதி அறிவு, அந்தம் ஆற்றல், பாதத்திறம் இவற்றாலாம் பயனாம் திருவடிப் பேறு. இத் திருப்பாட்டின்கண் "பாடி" என்னும் மறை எட்டு முறை காணப்படுகின்றது. அதனால் இறைவன் எட்டு வான்குணமும் குறிக்கப்படுகின்றதோர்க.