தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

viii

     மேலும் "தில்லைத் திருச்சிற்றம்பலம்" என்பது எட்டெழுத்தாகும். கொடிக்கவியின்கண் எட்டெழுத்துக் குறிக்கப்படுவது வருமாறு:

 
"அஞ்செழுத்தும் எட்டெழுத்தும் ஆறெழுத்தும் நாலெழுத்தும்
 
 பிஞ்செழுத்தும் மேலைப் பெருவெழுத்தும் - நெஞ்சழுத்திப்
 
 பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும்
 
 கூசாமற் காட்டக் கொடி."
 
- கொடிக்கவி, 4.
     ஈண்டுக் கூறப்படும் எட்டெழுத்து வேறாயினும் நாம் தில்லைத் திருச்சிற்றம்பலம் எனக் கொள்ளுதும். அம் முறையில் ஆறெழுத்துத் திருநீலகண்ட மறையாகும். ஐந்தெழுத்து சிவயநம, நாலெழுத்து சிவசிவ என்க.

     திருவைந்தெழுத்தில் செந்தமிழியற்கை முற்றும் சிவணியுள்ளது. அதனைச் சுருக்கமாகக் காட்டுதும். உயிர் எழுத்துகள் இயைந்து இயக்கும் எழுத்தும் இயங்கு மெழுத்தும் என இரு வகைப்படும். இயக்கு மெழுத்து அகரம். இயங்கு மெழுத்துக்கள் ஏனைய உயிர் எழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகளும், மெய் எழுத்துகளும் ஆகும். மெய்யெழுத்துகள் வன்மை, மென்மை, இடைமை என மூவகைப்படும். திருவைந்தெழுத்தில் சிகரத்தின் கண் சகர வல்லெழுத்திருக்கிறது. அதனைப் பிரிக்குங்கால் ச் + இ + அ = சி. இதில் இயங்குமெழுத்துச் சகரமும் இகரமும் ஆகும். சகரம் சரண் என்னும் புகலிடம் குறிக்கும் குறிப்பாகும். இகரம் இவண் அல்லது இஃது எனக் குறிக்கப்படும் உயிர்க் குறிப்பாகும். அகரம் இயக்கு முயிராகிய இறைவனைக் குறிக்கும் குறிப்பாகும். வகரம் மொழிமுதலாம் இடையினம். இது திருவருளைக் குறிப்பதாகும். யகரம் அதுபோல் இடையினம். இஃது உயிரைக் குறிப்பதாகும். நகரம் மொழி முதலாம் மென்மை. இது மறைப்பாற்றலைக் குறிப்பதாகும். மகரம் அதுபோல் மெல்லினம். இது மலம் மாயை கன்மங்களைக் குறிப்பதாகும். இந் நான்கினையும் இயக்கு முயிர் அகரம். மொழி முதலாம் மெய்கள் ஒன்பது. அவை ''''க ச த ப'''' என்னும் வல்லெழுத்து நான்கும், ''''ஞ ந ம'''' என்னும் மெல்லினம் மூன்றும், ''''ய வ'''' என்னும் இடையினம் இரண்டும் என்பன. இவற்றுள் ''''க'''' கரம் இன எழுத்தாகிய ''''ங'''' கர மொழி முதலாகாமையின் அது கொள்ளப்படவில்லை. ''''ந, ம'''' என்னும் இரண்டு மெல்லினம் கொள்ளப்பட்டமையால் அதன் இனமாகிய ''''த, ப,'''' என்னும் வல்லினம் இரண்டும் கொள்ளப்பட்டதோ டொக்கும். ''''ஞ'''' கர மெல்லெழுத்தும் அதன் இனமாகிய ''''ச'''' கர வல்லெழுத்தும் கொள்ளப்பட்டமையால் அதுவும் கொள்ளப்பட்டதோ டொக்கும். வகரம் எட்டுயிரோடு மொழி முதலாம். சிறப்புப்பற்றி முன் வைக்கப்பட்டது.